செய்திகள்
டோமின் தச்சங்கிரி

கேரளாவில் மந்திரியுடன் மோதல்: போக்குவரத்து கமி‌ஷனர் திடீர் மாற்றம்

Published On 2016-08-20 13:42 IST   |   Update On 2016-08-20 13:42:00 IST
கேரள மாநில போக்குவரத்துத்துறை கமி‌ஷனராக இருந்தவர் டோமின் தச்சங்கிரிக்கு மாநில பப்ளிக்கே‌ஷன் துறையின் இயக்குனர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில போக்குவரத்துத்துறை கமி‌ஷனராக இருந்தவர் டோமின் தச்சங்கிரி. இவர், போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினார். ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு பெட்ரோல் கொடுக்கக் கூடாது என்று பங்க் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனால் சர்ச்சைகளில் சிக்கி பெயர் எடுத்தார். மேலும் ஹெல்மெட்டுடன் பெட்ரோல் வாங்க வருவோரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

டோமின்தச்சங்கிரியின் செயல்பாடுகள் போக்குவரத்துதுறை மந்திரி சசீந்திரனுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர், டோமின் தச்சங்கிரியுடன் வாக்குவாதம் செய்தார்.

இந்த நிலையில் டோமின்தச்சங்கிரி தனது துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கு இடமாறுதல் அளித்தார். அதை ஏற்க மறுத்த மந்திரியிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.

போக்குவரத்து மந்திரி மற்றும் கமி‌ஷனர் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டோமின்தச்சங்கிரி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

மேலும் அவர், போக்குவரத்து அலுவலகங்களிலும் தனது பிறந்த நாளை கொண்டாட உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த தகவல் அறிந்த போக்குவரத்து மந்திரி சசீந்திரன் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற போக்குவரத்து மந்திரி சசீந்திரன், தனது துறையின் கமி‌ஷனர் டோமின் தச்சங்கிரியை உடனடியாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட முதல்-மந்திரி பினராய் விஜயன், போக்குவரத்து கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து டோமின்தச்சங்கிரியை விடுவிக்குமாறு மாநில தலைமை செயலாளர் விஜயானந்தனிடம் அறிவுறுத்தினார்.

அதன்படி நேற்று டோமின் தச்சங்கிரி போக்குவரத்து கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஏ.டி.ஜி.பி. அனந்தகிருஷ்ணன் புதிய போக்குவரத்து கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மாநில குற்றப்பிரிவு கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

டோமின் தச்சங்கிரிக்கு மாநில பப்ளிக்கே‌ஷன் துறையின் இயக்குனர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News