செய்திகள்

புல்லட் ரெயில் திட்டம் ரெயில்வே ஊழியர்கள் 400 பேருக்கு ஜப்பானில் பயிற்சி

Published On 2016-08-19 07:07 GMT   |   Update On 2016-08-19 07:07 GMT
புல்லட் ரெயில் திட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 400 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிவேக புல்லட் ரெயில்களை இயக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ரெயில் ஓடுவதற்கு பிரத்யேக தனி பாதை அமைக்க வேண்டும்.

இதனால் செலவு மிகவும் அதிகமாக இருக்கும். எனவே முதல் கட்டமாக அகமதாபாத்-டெல்லி இடையே புல்லட் ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த திட்டத்தை ஜப்பான் உதவியுடன் செயல்படுத்த உள்ளனர். இதற்காக ரூ.97 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இதில் ரூ.79 ஆயிரம் கோடியை ஜப்பான் உதவியாக வழங்க முன்வந்துள்ளது. பணிகளை முடித்து 2023-ம் ஆண்டு ரெயிலை இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

இந்த ரெயில்களை இயக்குவதற்கும், மற்ற பணிகளை கவனிப்பதற்கும் ரெயில்வே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 400 ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அனைத்து மண்டல ரெயில்வேயிலிருந்தும் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான செலவை ஜப்பான் அரசே ஏற்றுக்கொள்ள இருக்கிறது.

Similar News