செய்திகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கு வன்முறை: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

Published On 2016-08-16 12:14 IST   |   Update On 2016-08-16 12:14:00 IST
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புல்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கடந்த மாதம் பலியானார். இதை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் மத்தியில் உள்ள புத்காம் மாவட்டத்தின் மகம் என்ற பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து 39-வது நாளாக ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் ஆகிய நகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாதிகளில் போராட்ட அழைப்பு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்ந்து திறக்கப்படாமல் உள்ளன.

ஜூன் 8-ம் தேதி முதல் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

Similar News