செய்திகள்

பிரபல குற்றவாளியுடனான துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2016-04-25 12:09 IST   |   Update On 2016-04-25 12:09:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை பிரபல கொலை குற்றவாளியுடனான துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

இங்குள்ள தாத்ரி மாவட்டத்தை சேர்ந்தவன் சுல்தான். கொலை, கொள்ளை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் தேடப்பட்டுவரும் குற்றவாளியான இவன் ஒருவீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்றுகாலை அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று, சுல்தான் மறைந்திருந்த வீட்டை சுற்றிவளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க சுல்தான் துப்பாக்கியால் சுட தொடங்கினான். போலீசாரும் துப்பாக்கியால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.

இந்த என்கவுன்டரில் சுல்தானின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்தர் கான் என்பவர் உடலில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்த அக்தர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குற்றவாளி சுல்தானுடனான துப்பாக்கி சண்டையின்போது அக்தரை மட்டும் தனியாக விட்டுவிட்டு இதர போலீசார் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக குற்றம்சாட்டும் அக்தரின் குடும்பத்தார், அவரது மரணத்துக்கு காரணமான குற்றவாளியை கைது செய்யும்வரை அக்தரின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Similar News