செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-04-25 08:08 IST   |   Update On 2016-04-25 08:07:00 IST
பாலியல் குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
புதுடெல்லி :

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள சீலம்பூர் நகரை சேர்ந்த தஞ்சீர் ஆலம் என்பவர் 2011-ம் ஆண்டு மே மாதம் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிதானி, சங்கீதா டிங்ரா செகல் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதில் குற்றவாளிக்கு செசன்சு கோர்ட்டு அளித்த 3 வருட தண்டனையை 7 வருட கடுங்காவல் தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள், இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதித்துறை கருணை காட்டக்கூடாது என்று தெரிவித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கற்பழிப்பு என்பது மிகக் கொடிய குற்றம் ஆகும். அது தனிப்பட்ட நபருக்கு எதிரான குற்றம் மட்டும் அல்ல. இந்த சமுதாயத்துக்கு எதிரான குற்றமும் கூட. எனவே அந்த வகை குற்ற வழக்குகளை கடுமையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு கருணை காட்டாமல் அதிக தண்டனை வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச தண்டனையை ஏற்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர். 

Similar News