இந்தியா

2006 மும்பை ரெயில் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

Published On 2025-07-21 12:27 IST   |   Update On 2025-07-21 12:27:00 IST
  • பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மும்பை:

கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பை புறநகர் மேற்கு வழித்தடத்தில் பல ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்ததில் 189 பேர் பலியானார்கள். 800 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதில் 5 பேருக்கு மரண தண்டனை யும் , 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி மகாராஷ்டிர அரசு மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் அப்பீல் செய்து இருந்தனர். குண்டு வெடிப்பு வழக்கு தொடர் பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை நாள்தோறும் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 பேரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் அனில் கிலோர், ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தீர்ப்பு அளித்தது. 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

அரசு தரப்பு கோர்ட்டில் அளித்து இருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் மும்பை ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News