திருவனந்தபுரத்தில் வீடுகள் மீது குண்டு வீச்சு: 2 பேர் காயம்
- குண்டுகள் வெடித்து சிதறியதில் மாடன்விளையை சேர்ந்த அர்ஷித், ஹுசைன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
- போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி என 3 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவற்கு முன் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் பெருமாத்தூரில் உள்ள மாடன்விளை பகுதியில் இருக்கும் வீடுகளின் மீது நேற்று இரவு 10.30 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.
அந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் மாடன்விளையை சேர்ந்த அர்ஷித், ஹுசைன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதம் அடைந்தன. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அவர்கள் யார்? எதற்காக குண்டு வீச்சில் ஈடுபட்டனர்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.