இந்தியா

ரெயில் விபத்து

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து - 19 ரெயில்களை ரத்துசெய்தது இந்தியன் ரெயில்வே

Published On 2022-11-22 00:01 GMT   |   Update On 2022-11-22 00:01 GMT
  • கோரே ரெயில் நிலையத்தில் நுழைந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.
  • ஒடிசா முதல் மந்திரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்றது.

ரெயில் நிலையத்தில் இந்த சரக்கு ரெயில் மிக வேகமாக சென்றபோது திடீரென தடம் புரண்டது.

ரெயில் நிலைய தண்டவாளத்தை இடித்து தள்ளி நொறுக்கிய சரக்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்து நிகழ்ந்த போது ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்தில் நின்றிருந்தனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பலர் சரக்கு ரெயில் பெட்டி அடியில் சிக்கினர்.

தகவலறிந்த ரெயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு பெட்டிகளை விரைவாக அகற்றினர். அத்துடன் பயணிகளையும் மீட்டனர். அப்போது 3 பயணிகள் உடல் நசுங்கி பலியானது தெரிந்தது.

ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து அறிந்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக இயக்கப்படும் 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 20 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News