இந்தியா

சபரிமலையில் இதுவரை 19 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2024-12-11 07:17 IST   |   Update On 2024-12-11 07:17:00 IST
  • உடனடி தரிசன முன்பதிவு மூலம் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
  • இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார நாட்களை விட விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இதனால் இந்த நாட்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

வழக்கத்தை விட நடப்பு சீசனில் பெண்கள், குழந்தைகளின் வருகை 30 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதையொட்டி 18-ம் படியில் கால தாமதத்தை குறைக்க தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி நேற்று வரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இது கடந்த ஆண்டு இதே நாளில் சாமி தரிசனம் செய்தவர்களை விட 3.5 லட்சம் அதிகம் ஆகும்.

மண்டல பூஜை வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்த நிலையில் உடனடி தரிசன முன்பதிவு மூலம் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தேவையான அளவு அரவணை டின் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் அரவணை மற்றும் அப்பம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News