இந்தியா

மிசோரம் தேர்தலில் போட்டியிடும் 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்

Published On 2023-10-26 10:30 IST   |   Update On 2023-10-26 14:13:00 IST
  • 64.4 சதவீத வேட்பாளர்கள், தங்களுக்கு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  • தேர்தலில் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் எல்.ஹிராங்சால்தான் மிகவும் பணக்கார வேட்பாளர்.

அய்சால்:

மிசோரம் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 40 இடங்களுக்கான இந்த தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அந்த வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள பிரமாணபத்திரத்தின் அடிப்படையில், அவர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது 64.4 சதவீத வேட்பாளர்கள், தங்களுக்கு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கோடீஸ்வர வேட்பாளர்களிலேயே முதலிடத்தில் இருப்பவர் ஆம் ஆத்மி கட்சி மிசோரம் மாநில தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சுவா. ரூ.70 கோடி சொத்து கொண்ட இவர், அய்ஸ்வால் வடக்கு 3-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் எல்.ஹிராங்சால்தான் மிகவும் பணக்கார வேட்பாளர் ஆவார். லுங்லே தெற்கு தொகுதியில் போட்டியிடும் இவருக்கு ரூ.18.63 கோடி சொத்துகள் உள்ளன.

இந்த பணக்கார வேட்பாளர்களுக்கு மத்தியில், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராம்லன்-எடேனாதான் மிகவும் ஏழை வேட்பாளர் ஆவார்.

அவர் தனக்கு ஒரே ஒரு அசையும் சொத்து மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.1,500!

Tags:    

Similar News