கதம்பம்

புவியைக் காக்கும் புலி

Update: 2022-08-10 10:03 GMT
  • வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  • இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு.

புலிகள் இருக்கும் காடுகளில் மனிதன் நடமாட்டம் இருக்காது. அதனால் மரங்கள் வெட்டப்படமாட்டாது. மரங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்போது பறவை முதல் அனைத்து விலங்குகளும் அங்கே வாழத்தொடங்கும். இது ஒரு சங்கிலி தொடர்போல் இருக்கும். ஒன்றை ஒன்று சார்ந்தது.

காடுகளை நம்மை சுற்றியிருக்கும் அரண்போல மனதில் நிறுத்திப் பாருங்கள். இந்தக் காடுகள் இன்றுவரை பிழைத்திருக்க புலிகளே காரணம். இல்லை என்றால் என்றோ அழித்து ஒழித்து இருப்போம். நமக்கு கிடைக்கும் தண்ணீர் முதல், காற்று வரை காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது.

ஒரு புலி ஒரு வருடத்தில் சுமார் 45 முதல் 55 வரையிலான இரை விலங்குகளை உணவாகக்கொள்ளும். இரை விலங்குகளின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க கொன்றுண்ணிகள் பெரும் உதவி செய்கின்றன. இரை விலங்குகள் பெருகி, வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் காடுகளின் தரம் வெகுவாக குறையும். இறுதியில், அனைத்தையும் இழக்க வேண்டி வரும். சமநிலை இருப்பது மிக முக்கியம்.

வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு. இது போன்ற காரணங்களால் உணவில்லாமல், வேறிடம் செல்லவும் வழி இல்லாமல் ஒரு பகுதியில் உள்ள மொத்த புலிகளும் தனிமைப்பட்டு முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகலாம்.

அழிந்து போனால் என்ன.. நல்லது தானே என்று நீங்கள் நினைத்தால், உங்களை சுற்றியுள்ள வனங்கள் தங்கள் இயல்புகளை இழந்து விட்டன என்பதையும் மனதில் கொள்ளுங்கள். வனத்தின் இயல்புகள் தொலைந்தால் அது நம் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

-ஆற்றல் பிரவீன்குமார்

Tags:    

Similar News