கதம்பம்

ஒரே பொருளில் இனிப்பும் கசப்பும்...

Published On 2022-12-22 11:16 GMT   |   Update On 2022-12-22 11:16 GMT
  • இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும்.
  • சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.

அரசனுக்கு ஒரு சந்தேகம்!

உலகத்திலேயே இனிமையானது எது?

கசப்பானது எது? என்று தண்டோரா போட்டு ஊர் மக்களுக்கு அறிவிப்பு செய்தான்.

உலகத்திலேயே மிக மிக இனிமையான பொருள் ஒன்றையும், மிகவும் கசப்பான பொருள் ஒன்றையும் எடுத்து வர வேண்டும். அரசனின் மனதிற்கு திருப்தி அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்.

ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்து வந்தார்கள்..

இனிப்பிற்கு லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமூன், மைசூர்பா உள்ளிட்ட ஏராளமான இனிப்பு வகைகள்.

கசப்பிற்கு பாகற்காய் முதல் தங்களுக்கு தெரிந்த அத்துனை கசப்பானதையும் எடுத்து வந்தார்கள்.

அரசன் மனம் திருப்தி அடையவில்லை!

கடைசியாக கோமாளி தோற்றத்தில் இருந்த ஒருவன் ஆட்டினுடைய "நாக்கை மட்டும்" எடுத்து வந்திருந்தான்.

அங்கிருந்தவர்கள் பரிகாசமாக சிரித்தார்கள். பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்த ஆட்டு நாக்கை பார்த்து முகம் சுளித்தார்கள்.

இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று கருதி, அரசன் அவனை அருகில் அழைத்து என்ன இது என்று கேட்க,

கோமாளி, நாக்குதான் உலகத்திலேயே மிகவும் இனிமையானது. கடவுள் புண்ணியத்தால் நாம் பேசுகிறோம் என்றால் அதற்கு இந்த நாக்குதான் காரணம். இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும். சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.

பேஷ்! ஃபேஷ்!

சரி, கசப்பான பொருளை காட்டு என்று அரசன் கேட்கிறான்.

மன்னா! உலகத்திலேயே மிகவும் கசப்பான பொருளும் இதே நாக்குதான்! நாம் கோபத்தில் பேசுவதால் எத்தனை மனிதர்களின் மனங்களை காயப்படுத்துகிறோம்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் பேசும் பேச்சுக்களால் பகைமையை வளர்த்துக் கொள்கிறோம். எதிரிகளை சம்பாதிக்கிறோம்.

இந்த நாக்கு மிக கெட்டது மன்னா! மிக மோசமானது! மிக கசப்பானது!

-பாலு சுப்பிரமணியன்

Tags:    

Similar News