கதம்பம்

ஐயப்பனுக்கு தனி அஞ்சல் குறியீடு

Update: 2022-11-24 10:43 GMT
  • ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும்.
  • பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும்.

நம் நாட்டில், இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு (பின் கோடு) உள்ளது. அதில் ஒருவர் குடியரசுத் தலைவர். மற்றொருவர் சபரிமலை ஐயப்பன் என்றால் அது எல்லோரையும் விழியுயர்த்தி ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் தான்.

குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவன் அஞ்சல் குறியீட்டு எண்: 110004.(ஆண்டு முழுவதும்)

சபரிமலை ஐயப்ப சுவாமி சந்நிதானத்தின் அஞ்சல் குறியீட்டு எண்: 689713 ( அறுபத்திரண்டு நாள்களுக்கு மட்டும்) இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணில் தற்போது சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில் சபரிமலையின் 18-ஆம் படி மற்றும் ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் வேறு எந்த அஞ்சல் அலுவலகமும் இதுபோன்ற தனி அஞ்சல் முத்திரைகளைப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்த இந்திய அஞ்சல் துறையும் அனுமதிப்பதில்லை.

ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும். பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும்.

இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, இந்த 18 ஆம் படி மற்றும் ஐயப்பன் முத்திரையிடப்பட்ட அஞ்சல் உறைகளை வாங்கி தங்கள் வீடுகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடிதங்களாக அனுப்புகின்றனர். பத்திரப்படுத்தவும் செய்கின்றனர்.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் இந்த சிறப்பு உலோக அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படும். தொடர்ந்து அடுத்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும்.

ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் எழுதும் ஏராளமான கடிதங்கள் இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு வருகின்றன. சந்தோஷம், சோகம், துக்கம், தீராத பிரச்னைகள், கவலைகள், காதல் என பல்வேறு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கடிதங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் இந்த சந்நிதான அஞ்சல் அலுவகத்திற்கு வருகின்றன. ஐயப்பன் பெயரில் காணிக்கையாக பணவிடைகளும் இந்த அஞ்சல் அலுவகத்திற்கு வந்து கொட்டுகின்றன.

வீட்டில் நடக்கும் பல்வேறு வைபோகங்கள், விசேஷங்களுக்கு ஐயப்பனை அழைக்கும் முதல் அழைப்பிதழும் இங்கு வருகின்றன.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் சன்னிதானத்தில் ஐயப்பனிடம் அளித்து நிவர்த்திக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் பூஜிக்கப்படுகிறது.

-வீரமணி வீராசாமி

Tags:    

Similar News