கதம்பம்

சுரதாவை ஈர்த்த புரட்சி கவி

Published On 2023-12-13 16:51 IST   |   Update On 2023-12-13 16:51:00 IST
  • “இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்’ என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்
  • கடிதம் எழுதிக் கையெழுத்திடும் போது இட வசதிக்காக “சு ர தா” என்று இடம் விட்டு எழுதுவார்.

"உவமைக் கவிஞர்' சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன். அவர் 'சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார்.

புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார்.

இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, "பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

"இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால் "சுப்புரத்தின தாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

கடிதம் எழுதிக் கையெழுத்திடும் போது இட வசதிக்காக "சு ர தா" என்று இடம் விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே 'சுரதா' ஆனது.

-சவுந்திரராஜன்

Tags:    

Similar News