கதம்பம்

கேள்விக்கு பதில் கேள்வியே..!

Published On 2024-03-12 12:15 GMT   |   Update On 2024-03-12 12:16 GMT
  • மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
  • பொதுவாக, சாக்ரடீசிடம் யாராவது கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.

கிரேக்க நாட்டில் தோன்றிய சிந்தனையாளர்களில், சாக்ரடீஸ் தலை சிறந்தவர். தத்துவ ஞானி என்றால், அழுக்குப்பிடித்த ஆடைகளை உடுத்திக் கொண்டு, வேலைக்கு போகாமல், தத்துவம் பேசியவர் அல்ல..

ராணுவத்தில் பணியாற்றினார்.. குடும்பத்தை பராமரித்தார்.. மனிதர்கள் சமூகத்தில் எவ்வாறு வியாபாரம் செய்வது, கல்வி கற்பது, வழக்குகளில் வாதிடுவது என்று, எளியவர்களுக்கும் புரியும்படி உணர்த்தினார்.

ஆனால், இவ்வளவு நல்லது செய்த சாக்ரடீசை, அந்நகர ஆட்சியாளர்கள், விஷம் கொடுத்து மரண தண்டனை அளித்தார்கள். அது ஏன்?

காரணம், பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரத்தை சாக்ரடீஸ் செலவிட்டார். அனைவரையும் சிந்திக்க வைத்தார். அதுதான், ஆட்சியாளர்களுக்கும், மத குருக்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது.

மக்கள் கேள்வி கேட்டால், தங்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதனால், சாக்ரடீசின் மீது பொய் குற்றம்சாட்டி, அவருக்கு மரண தண்டனை கொடுத்தனர்.

அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தும், நாட்டின் சட்டங்களை மதிப்பதாக கூறி, சாக்ரடீஸ் மரணத்தை வீரத்துடன் எதிர்கொண்டார்.

பொதுவாக, சாக்ரடீசிடம் யாராவது கேள்வி கேட்டால், அதற்கு நேரடியாக அவர் பதில் சொல்ல மாட்டார்.

சாக்ரடீஸ், அவர்களிடமே கேள்வி மேல் கேள்வி கேட்பார். அதில் கிடைக்கும் பதில்களை வைத்து, உண்மையை உணர்த்துவார்.

இதை சாக்ரடீசிய முறை என்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்க, மிகச்சிறந்த உத்திகளில் ஒன்றாக ஆசிரியர்கள், சாக்ரடீசிய முறையை பரிந்துரைக்கின்றனர்.

Tags:    

Similar News

தம்பிடி