கதம்பம்

ஓயாத ஓட்டம்..

Published On 2023-12-19 16:15 IST   |   Update On 2023-12-19 16:15:00 IST
  • பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.
  • பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது, வந்து பார்க்க வழியில்லை.

வாழ்க்கையின் வெற்றிக்கு ஓடுவது தவறில்லை. ஆனால் நிம்மதி மற்றும் குடும்ப சந்தோஷத்தை தொலைத்துவிட்டு ஓடுவது பயனற்றது.

எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்..

நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு சொந்த ஊர் சுமையாக இருந்தது.. அதை உதறி வீசினார்கள், வேகம் மேலும் கூடியது.

பந்தயம் மேலும் கடினமான போது தாய்மொழி சுமையாக இருந்தது. அதையும் வீசினார்கள் இன்னும் வேகம் அதிகரித்தது.

பின்னர் அறச்சிந்தனைகள் பெரும் சுமையாயின . அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள்.

இறுதியில் உறவுகள் யாவும் சுமையாகிப்போயின. அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்.

இப்போது பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை என்ற வெறி மட்டும் எஞ்சி உள்ளது. இனி வீசி எறிய எதுவுமில்லை.

குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன. மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்கள் உருவாகி விட்டார்கள். பிறந்த பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும் மலத்தை கழுவவும் கூட நேரம் இல்லாத இளம் அம்மாக்கள் உருவாகி விட்டனர்.

பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.

பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது, வந்து பார்க்க வழியில்லை.

எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கி விட்டன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது.

மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக்காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த கால கல்வி முறையில் பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே ஐந்து வயது வரைக்கும் தான், அதன் பின்னர் ஓடத்தொடங்கும் அவர்கள், வாழ்நாள் முழுவதற்கும் நிற்பதற்கு வழியே இல்லை.

தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக பிரிந்தன. இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள்.

மனித இனம் தனது அழிவுக்கான ஒரு வழிபாதையில் ஓடத்தொடங்கி விட்டது, இனி இதை தடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

-சிவசங்கர்

Tags:    

Similar News