- தென் தமிழகத்தையும், வட ஈழத்தையும் பெருவெள்ளம் சூழ்வதற்கான அடிப்படைக் காரணம்.
- புவி வெப்பமயமாதல் என்று மாநாடு கூடிப் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை.
'எல் நீனோ' (El Nino), சரியாக உச்சரித்தால் 'எல் நீன்யோ' என்று சொல்லலாம். ஸ்பானிய மொழியில் 'ஆண் குழந்தை' என்னும் அர்த்தம் தருவது. 1600 ஆம் ஆண்டுகளில் பெரு தேசத்து மீனவர்கள் , மார்கழி மாதத்தில் பசிபிக் சமுத்திரம் வெப்பமாவதை அவதானித்தார்கள். பிற்காலங்களில் அந்த விளைவுக்கு 'ஆண் குழந்தை' என்று பெயரிட்டார்கள். கடல் வெப்பமடைவதற்கு அந்த ஆண் குழந்தையே காரணம் என்ற முடிவுக்கு வந்ததால், ஸ்பானிய மொழியில் 'ஆண் குழந்தை' என அர்த்தம் தரும் 'எல் நீன்யோ' என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
அது என்ன 'எல் நீன்யோ'? பசிபிக் சமுத்திரத்தின் தென்னமெரிக்கப் பகுதி ஏன் வெப்பமடைகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலே, இன்று தென் தமிழகத்தையும், வட ஈழத்தையும் பெருவெள்ளம் சூழ்வதற்கான அடிப்படைக் காரணம்.
'தீவிர எல் நீன்யோ' (Super El Nino) வரப்போகிறது, வரப்போகிறது என்று பல மாதங்களாக, மேற்குலக வானிலை ஆராய்ச்சியாளர்களும், இயற்கைவளப் பராமரிப்பாளர்களும் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தியும், யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. விளைவு??? இன்று தென்தமிழகமும், வட ஈழமும் வரலாறு காணாத பாதிப்புடன் அலறிக் கொண்டிருக்கின்றன.
2023ஆம் ஆண்டு உலகமெங்கும் ஏற்பட்ட காலநிலைப் பிறழ்வைக் கணித்த ஆராய்ச்சியாளர்கள், 2024இல் 'தீவிர எல் நீன்யோ' (Super El Nino) உருவாகும் என்று கணித்துவிட்டார்கள். அதன் பாதிப்புகள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இயற்கை இடர்களைக் கொண்டுவரும் என்றும் எச்சரித்துவிட்டார்கள். சில இடங்களில், பெருங்குளிர். சில இடங்களில் பெருங்காற்று, சில இடங்களில் பெருமழை மற்றும் வெள்ளம். .
அது என்ன 'என் நீன்யோ'?
பசிபிக் சமுத்திர நீரில் ஏற்படும் வெப்பநிலை உயர்வினால், ஆவியாகும் நீராவியின் செறிவு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் மாற்றமே 'எல் நீன்யோ' ஆகும். சூடான காற்று, மேகக் கூட்டங்களாகப் பெருகிப் பசிபிக் சமுத்திரத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனைகளுக்கு நகர்ந்து, காலநிலைப் பிறழ்வை உருவாக்குகிறது. அத்துடன் கடலடி நீரோட்டத்திலும் வெப்பநிலை மாற்றங்கள் உருவாகின்றன. இவ்விழைவு, சராசரியாக ஏழு ஆண்டுகளுக்கிடையில் நடைபெறும் ஒரு இயற்கை விளைவுதான்.
சமுத்திர நீரின் வெப்ப அதிகரிப்பால், சூடான நீராவி அதிகளவில் வளிமண்டலத்தை அடைவதால், புவியின் மொத்த வளிமண்டலக் கோளமும் வெப்பநிலை மாற்றமடைகிறது. அதனால், புவியெங்கும் பரவலாகக் காலநிலைப் பிறழ்வுகள் உருவாகின்றன.
2023ஆம் ஆண்டு சூரியப் புயல் காரணமாக உலகம் முழுவதும் அதிகளவு வெப்பம் இருந்ததால், 2024ஆம் ஆண்டு 'தீவிர என் நீன்யோ' ஆண்டாக இருக்குமென்று திடமாகக் கணித்திருந்தார்கள். இதுவே இன்றைய நமக்கான பேரழிவுக்கும் காரணம். இந்த எல் நீன்யோ, வளிமண்டல வெப்பநிலையைச் சராசரியாக 0.5°C அளவுக்குக் குறைக்கும்வரை தொடரும். அதற்கு 2 மாதங்களோ அல்லது அதிகமாகவோ எடுக்கலாம்.
'எல் நீன்யோ' வளிமண்டல வெப்பநிலையில் உருவாக்கும் விளைவு, இயற்கையாய் நடைபெறும் ஒன்றுதான். இதற்கும், புவி வெப்பமயமாதல் என்று மாநாடு கூடிப் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லை.
எல் நீன்யோ ஏற்படுத்தும் வெப்பநிலை அதிகரிப்பைப் போல, வெப்பநிலைக் குறைப்பையும் இயற்கை உருவாக்கும். அதே பசிபிக் சமுத்திரத்தில் நடக்கும் வெப்பநிலைக் குறைப்பு விளைவை 'லா நின்யா' என்பார்கள். ஸ்பானிய மொழியில் 'பெண் குழந்தை' என்று அர்த்தம். இந்த 'லா நின்யா', அவுஸ்ரேலியக் காடுகளை அப்பப்போ எரிய வைக்கிறது.
'எல் நின்யோ' மற்றும் 'லா நீன்யா' ஆகிய இரண்டும் இயற்கையின் இரண்டு விளைவுகளே! மனிதனுக்கும் அவற்றுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. மனிதனின் முட்டாள்தனம், இதனுடன் சேர்ந்து மேலதிகமான விளைவுகளை உருவாக்குகின்றன. அவை தனியானவை.
-ராஜ்சிவா