கதம்பம்

இதமளிக்கும் பாடல்

Published On 2024-02-12 11:45 GMT   |   Update On 2024-02-12 11:45 GMT
  • கண்ணதாசன் உங்களை எப்படிப் புகழ்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
  • வீட்டிற்குள் நுழைந்த போது ரேடியோவில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

மத்திய அரசாங்கத்தில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, நிதி அமைச்சராக இருந்த போது, ஏதோ ஒரு காரணத்துக்காக பதவி விலகினார். சென்னை திரும்பிய அவர் ஒருநாள் கவிஞர் கண்ணதாசனை பார்க்க விரும்பினார்.

இந்த செய்தியறிந்த கவிஞர் மிகவும் வியப்படைந்தார். நேரு, காமராஜ், இந்திரா காந்தி போன்றவர்களுக்கே ஆலோசகராக விளங்கிவர், தன்னை ஏன் பார்க்கவிரும்புகிறார் என குழப்பத்துடன் அவரது வீட்டிற்குச் சென்றார்.

கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த டி.டி.கே,கவிஞரைக் கண்டதும் எழுந்தோடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். கவிஞருக்கு இன்னும் குழப்பம் அதிகரித்தது.

"கண்ணதாசன் உங்களை எப்படிப் புகழ்வதென்றே எனக்குத் தெரியவில்லை. என் கவலையைப் போக்கிய மாமருந்து நீங்கள் தான்"என்று கூறிய டி.டி.கே, மீண்டும் கவிஞரைப் பார்த்து,

"வீண் பழி என் மீது சுமத்தப் பட்டு நான் பதவியை விட்டு விலக நேர்ந்த போது, என் இதயம் துடித்தது..யார் யாரோ எனக்கு ஆறுதல்கூறினார்கள். ஆனாலும் என் மனம் ஆறுதலடைய மறுத்தது. கனத்த நெஞ்சத்துடன் சென்னை வந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்த போது ரேடியோவில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. 'போனால் போகட்டும் போடா..' என்ற அந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் என் மனம் ஆறி சமாதானம் அடைந்தது" என்று கூறிய போது அவர் குரல் தழுதழுத்து இருந்தது.

மீண்டும், "கண்ணதாசன்! எவ்வளவு பெரிய தத்துவங்களையெல்லாம் உங்கள் பாடலில் அடக்கி வைத்து இருக்கிறீர்கள். என்னைப் போல எத்தனையோ பேர்களின் மனப்புண்களுக்கு உங்கள் பாடல்கள் எப்படியெல்லாம் இதமளித்து வருகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? " என வாயாரப் பாராட்டினாராம்.

-பரதன் வெங்கட்

Tags:    

Similar News

தம்பிடி