கதம்பம்
null

ஒன்றில் கூடவா இருக்காது..?

Published On 2024-02-02 17:45 IST   |   Update On 2024-02-02 17:45:00 IST
  • பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தில் தான் தேடமுடியும்.
  • பூமியில் இருந்து எந்த ரேடியோ சிக்னலும் போயிருக்காது.

நமக்குத் தெரிந்த பிரபஞ்சம் என்பது இதுவரை நம் டெலெஸ்கோப்களால் அறியமுடிந்த அளவே. பூமியில் உள்ள மணல் துகள்களை விட அதிக எண்ணிக்கையில் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உள்ளன என்றால் பார்த்துக்கலாம்.

இத்தனை கோடானுகோடி நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றே ஒன்றில் கூடவா உயிர்கள் இல்லாமல் போகும்? நிச்சயமாக இருக்கும். ஆனால் நாம் அவர்களை கண்டறிவது சாத்தியமில்லை. ஏனெனில் நம் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளரவில்லை.

ஆனால் அவர்கள் ஏன் நம்மை கண்டறியவில்லை?

இதற்கான விடையை பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தில் தான் தேடமுடியும்.

அதாவது உலகின் உயிர்கள் தோன்றி சுமார் 4 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்புதான் ரேடியோவை கண்டுபிடித்தோம்.

இந்த 4 கோடி ஆண்டுகளில் பூமியை நோக்கி எந்த ஏலியன் கிரகத்தின் ரேடியோ ரிசீவர்கள் குறிவைத்திருந்தாலும், பூமியில் இருந்து எந்த ரேடியோ சிக்னலும் போயிருக்காது.

நம் ரேடியோ சிக்னல்கள், டிவி. சிக்னல்கள் எல்லாம் சென்ற தூரத்தை எல்லாம் கணக்கிட்டால்..

நாம் அறிந்த பிரபஞ்சத்தின் அளவு ரஷ்யா என வைத்துக்கொண்டால், நம் ரேடியோ சிக்னல்கள் கவர் செய்த பகுதியின் பரப்பளவு ஒரு நெல்மணிக்கு சமமானதே.

அதாவது ரஷியாவில் எங்கோ மூலையில் இருக்கும் ஒரு ஏலியன், ரஷியாவில் எங்கோ கிடக்கும் ஒரு நெல்மணியை கண்டுபிடிப்பதற்கு ஒப்பானது நம்மை ஏலியன்கள் கண்டுபிடிப்பது.

அதனால் ஏலியன்கள் யாரும் நம்மை கண்டுபிடிக்கும் வாய்ப்பு எதுவும் தற்போதைக்கு சுத்தமாக இல்லை.

இருங்க..ஏதோ தோட்டத்தில் ஒரு பறக்கும் தட்டு இறங்குவதுபோல இருக்கு.. என்னனு பார்த்துவிட்டு வருகிறேன்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News