- ஆஸ்திரேலியாவில் இந்தியாவை விட இரு மடங்கு நிலப்பரப்பு.
- மும்பை அளவே ஜனத்தொகை. மத்திய ஆஸ்திரேலியா முழுக்க பாலைவனம்.
ஆஸ்திரேலிய நிலப்பரப்பு மிக வித்தியாசமானது. ஆசியா, ஆபிரிக்கா என மற்ற கண்டங்களிடம் இருந்து பல லட்சம் ஆண்டுகளாக துண்டிக்கபட்டு இருந்தது.
மனிதன் அங்கே போனதும் முயல், எலி, டிங்கோ நாய், பூனை மாதிரி மிருகங்களின் பரவலை தடுக்க அங்கே சிங்கம், புலி, ஓநாய், நரி எதுவும் இல்லை. இவை பல்கிப்பெருகி மிகப்பெரும் சுற்றுசூழல் பிரச்சனையை உருவாக்கின.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவை விட இரு மடங்கு நிலப்பரப்பு. மும்பை அளவே ஜனத்தொகை. மத்திய ஆஸ்திரேலியா முழுக்க பாலைவனம்.
கார்கள் இல்லாத 19ம் நூற்றாண்டில் பாலைவனத்தில் ஒட்டகம் இருந்தால் நல்லது என ஏதோ மகானுபாவனுக்கு தோன்றி ஒட்டகங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டன.
20ம் நூற்றாண்டில் கார்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் அவற்றுக்கு அவசியமின்றி போய்விட்டது.
இன்று 12 லட்சம் ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அனைத்தும் காட்டு ஒட்டகங்கள். பாலைவன பூமியில் இருக்கும் புல், பூண்டை எல்லாம் தின்று தீர்க்க, மிகப்பெரும் சுற்றுச்சூழல் பிரச்சனையாக மாறியது.
அதனால் ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி சுட்டுகொல்லலாம் என ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்தது.
ஒட்டகத்தை எல்லாம் மாடுகள் மாதிரி பண்ணைகளில் வளர்க்கமுடியாது. ஏற்றுமதி செய்யவும் செலவு ஆகும். வரும் வருமானம் போக்குவரத்து செலவுக்கே காணாது. ஆண்டுக்கு ஐயாயிரம் ஒட்டகங்கள் தான் உணவாகின்றன.
அதனால் ஆஸ்திரேலியா ஒட்டகங்களின் மேலான போரை அறிவித்தது. அங்காங்கே ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டு கொன்றார்கள். பெண் ஒட்டகம் ஒன்றை பிடித்து ஜி.பி.எஸ் பொருத்தி விட்டுவிடுவார்கள். அது ஒட்டக கூட்டத்துடன் சேர்ந்துவிடும். அதன்பின் அதை டிராக் செய்து அந்த ஒட்டகத்தை தவிர மற்றதை எல்லாம் ஹெலிகாபாப்டரில் இருந்து சுடுவார்கள். அது அங்காங்கே விழுந்து இறந்துவிடும். பெண் ஒட்டகம் மீண்டும் அடுத்த குழுவை தேடிப்போகும்.
இறக்கும் ஒட்டகங்கள் காட்டில் இருக்கும் மற்ற மிருகங்களுக்கு உணவாகும். இயற்கை எதையும் வீணடிப்பதில்லை.
- நியாண்டர் செல்வன்