- வெறுப்பு தரும் கருப்புதான் என் நிறம்!
- இல்லையென சொல்லாதவன்! என்னையே தருபவன்!
நான்,
உயரத்தால் மட்டுமல்ல;
உள்ளத்தாலும் உயர்ந்தவன்!
வெறுப்பு தரும் கருப்புதான் என் நிறம்!
இனிப்பு தரும் கருப்புக்கட்டி என் மனம்!
இல்லையென சொல்லாதவன்!
என்னையே தருபவன்!!
நுங்கு தருவேன்!
கிழங்கு தருவேன்!
சுத்தமான கள் தருவேன்!
சுவையான பதநீர் தருவேன்!
கற்கண்டு தருவேன்!!
தமிழ் சொற்கொண்டு எழுத
ஓலைச்சுவடியும் தருவேன்!!
படுக்க பாய் தருவேன்!
விசிறியும் தருவேன்!
நார் கயிறு தருவேன்!
உயிரும் தருவேன்!!
விழுந்தால் உங்கள் வீட்டுக்கு விட்டமாவேன்!
வெட்டினாலும் சட்டமாவேன்!!
நண்பர்களே,
உடல் தானம் பேசுகின்றீர் இன்று!
அன்றுதொட்டு நான் அதைத்தானே செய்கிறேன் இங்கு?
தொன்றுதொட்டு, தொண்டுசெய்யும் எனக்கு,
நிமிர்ந்து வளர நீர்தான் வார்த்தீரா?
நிலத்தை உழுது நலம்பட காத்தீரா?
இல்லையே!
இருந்தும் உமக்கு உதவுகிறேன் பார்த்தீரா?
நான்,
பிரதிபலன் பாராதவன்!
பிறரிடம் எதுவும் கேளாதவன்!
ஒன்றே ஒன்றுமட்டும் கேட்பேன்...
நீங்கள்
அள்ளியள்ளி அளிக்க வேண்டாம் ஏதும்!
என்னை
அழிக்காமல் விட்டாலே போதும்!
-அந்தோணிராஜ்