கதம்பம்

பூட்டாங்கயிறு

Published On 2024-06-09 16:30 IST   |   Update On 2024-06-09 16:30:00 IST
  • பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.
  • வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார்.

திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்பதையும் தாண்டி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.

வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.

1989ல் அருப்புக்கோட்டை சிவன் கோவிலில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் அவர் கூறிய தத்துவம் இது..

மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும்.. வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு.

ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.

வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவர் உள்ளான். அவன் தான் பூட்டாங்கயிறால் வண்டியையும் மாட்டையும் இணைத்து இயக்குகிறார்.

பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.

நம் உடலுக்குப் பெயர் அசித்து. ஆன்மா பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு. உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது.

இறைவன் என்னும் வண்டிக்காரன், பிராண வாயு என்னும் பூட்டான் கயிற்றால் உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டு உள்ளார்.

வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர்.

மரணம் வரும்வரை சரணம் சொல்ல வேண்டும் என்றபோது கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.

- ஆர்.எஸ். மனோகரன்

Tags:    

Similar News