கதம்பம்

வாழ்வியலை காட்டும் விடுகதை!

Published On 2024-06-02 15:15 IST   |   Update On 2024-06-02 15:15:00 IST
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துவிதமான பருவத்தினருக்கும் ஏற்ற விடுகதைகள் புழக்கத்தில் உள்ளன.
  • விடுகதைகள் காலம்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன.

பாமர மக்கள் வாய்மொழி மூலமாகப் படைத்து மக்கள் மத்தியில் உலவவிட்ட இலக்கிய வகைகளுள் 'விடுகதை' என்பது குறிப்பிடத்தக்ககதாகும்.

விடுகதைகளை எங்கள் வட்டாரத்தில் 'அழிப்பாங்கதைகள்' என்று சொல்கிறார்கள். பூட்டுவதும், திறப்பதுமான ஒருவித புதிர்த்தன்மை கொண்டதால் (விடை மூலம் விடுவிக்க வேண்டியதிருப்பதால்) இத்தகைய படைப்புக்களை விடுகதைகள் என்று கூறினார்கள் போலும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துவிதமான பருவத்தினருக்கும் ஏற்ற விடுகதைகள் புழக்கத்தில் உள்ளன.

மிகப் பழமையான இந்த நாட்டார் சொல்கதை வடிவம், இன்றுவரை புத்துயிர்ப்புடன் எழுந்து மொழியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

விடுகதைகள் காலம்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன. அவைகளில் சில நிலம் சார்ந்த மணமுடையதாகவும் இருக்கின்றன.

மருத நிலத்தில் தோன்றிய விடுகதை, கழனியில் விளையும் தாவரங்களைப் பற்றிப் பேசுகின்றன. சான்றாக,

'பச்சைப் பசேல் என்றிருக்கும்

பாகற்காயும் அல்ல

பக்கமெல்லாம் முள் இருக்கும்

பலாக்காயும் அல்ல

உள்ளே வெளுத்திருக்கும்

தேங்காயுமல்ல

உருக்கினால் நெய்வடியும்

வெண்ணையுமல்ல. .'

என்ற விடுகதையைக் கூறலாம்.

இந்த விடுகதையின் விடை 'ஆமணக்கு' என்பதாகும். ஆமணக்கு என்பது, மருத நிலத்தில் அதிகமாக விளையும் தாவரம். இந்தத் தாவரத்தின் விதையை ஆமணக்கு முத்து என்று சொல்வார்கள். ஆமணக்கு முத்தில் இருந்ததுதான் விளக்கெண்ணை தயாரிக்கிறார்கள்.

இந்த விடுகதை வரிக்கு வரி ஒரு புதிரைச் சொல்லி அதற்கு ஏற்ற ஒரு விடையையும் அடுத்த வரியில் சொல்லி அவ்விடையையும் மறுத்து, வாசகனை பொதுவிடை தேடச் சொல்லித் தூண்டுகிறது.

விடுகதையில் மொழி விளையாட்டுகளுக்கும், சொற்சேர்க்கைகளுக்கும் தனி இடம் உள்ளது. பல விடுகதைகள், சொற்சாமர்த்தியத்துடன் திகழ்கின்றன. அமைப்பியல் நோக்கிலும் விடுகதைகளைப்பற்றி ஆய்வுகள் நிகழ்த்த இடம் உள்ளது.சான்றாக,

"பல்லிருக்கிறவன் கடிக்க

மாட்டேன் என்கிறான்

பல்லிலாதவன் கடிக்கிறான்

அவர்கள் யார்?'

என்ற விடுகதையைப் பாருங்கள்.

'பல்' என்ற சொல் சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் சொற்களைத் தவிர்த்து இங்கு, சீப்பின் பல்லைக் குறித்துவருகிறது. 'சீப்பிற்கும் பல் உண்டு' என்ற ரீதியில் பொருள் தேடினால், விடுகதையின் முதல் இரண்டு வரிகளுக்கும் 'சீப்பு' என்ற விடை கிடைக்கும்.

இனி, 'கடிக்கும்' என்ற சொல்லாட்சி, எதார்த்தமான பொருள் நிலையில் இருந்து விலகி, 'புதுச்செருப்பும் கடிக்கும்' என்ற ரீதியில் நாம் பொருளைத் தேடினால் மூன்றாவது வரிக்கு விடையாகப் 'புதுச்செருப்பு' என்று தீர்மானிக்கலாம்.

'பல்' என்ற சொல்லும் அதற்குத் தொடர்புடைய 'கடிக்கும்' என்ற சொல்லும், நடைமுறை பிசகிய வெளியில் பொருள் தேடும் படி இவ்விடுகதையில் இருப்புக் கொண்டுள்ளன. இந்த மாதிரியாக, விடுகதையின் கட்டமைப்புக் குறித்தும் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.

-கழனியூரன்

Tags:    

Similar News