- அருமையான வாழ்க்கை. நல்ல உணவு. மகிழ்ச்சியான ஆட்டம் பாட்டம்.
- பணியாள் சில நாட்கள் விடுமுறை கேட்டுப் போனான்.
கடவுளின் பணியாளன் அவரிடம் சில நாட்கள் விடுமுறை கேட்டான். கடவுள் கொடுத்தார்.
"நீ திரும்பி வந்ததும், நீ கண்டவற்றையும், கேட்டவற்றையும் பொய்யில்லாமல் சொல்ல வேண்டும்" என்று கூறி அவனை அனுப்பினார்.
ஒரு வாரத்திற்குப் பின் பணியாளன் திரும்பி வந்தான்.
"நாட்களை எப்படிக் கழித்தாய்?' என்று கேட்டார் கடவுள்.
"அருமையான வாழ்க்கை. நல்ல உணவு. மகிழ்ச்சியான ஆட்டம் பாட்டம். ஆனால் அங்கு யாருமே உங்களைப் பற்றிப் பேசவில்லை. அது எனக்கு வியப்பளித்தது" என்றான் பணியாள்.
ஆறு மாதங்கள் சென்றன. பணியாள் சில நாட்கள் விடுமுறை கேட்டுப் போனான். ஆனால் அடுத்த நாளே திரும்பி வந்தான். கடவுள் அதன் காரணத்தைக் கேட்டார்.
"கடவுளே! அங்கு எதுவுமே சரியில்லை. மக்கள் வறுமையால் வாடுகின்றனர். தொற்றுநோய் பரவியுள்ளது. சிலர் மடிந்தனர். எங்கும் கடவுளே! கடவுளே! என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அதனால் நான் உடனே வந்துவிட்டேன்" என்றான் பணியாள்.
"துன்பம் வந்தால்தான் மக்களுக்கு என் நினைவு வரும். ஓயாமல் என்னை அழைப்பார்கள், வேண்டுவார்கள்" என்றார் கடவுள்.
இது ஒரு பிரெஞ்சு கதை.
-சச்சிதானந்தம்