கதம்பம்

சுக்கிர திசை!

Published On 2024-05-14 16:00 IST   |   Update On 2024-05-14 16:00:00 IST
  • பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும்.
  • சுக்கிரதிசை இருக்கும் இடத்தை வைத்து நற்பலன்களை கொடுக்கும்.

சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அது தவறாகும். சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.

பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும்.

இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும்.

முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும்.

சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்றயாவும் அமையும். பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு.

சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய்க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது.

அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

சுக்கிர திசை நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும்.

மொத்தத்தில் சுக்கிரதிசை இருக்கும் இடத்தை வைத்து நற்பலன்களை கொடுக்கும்.

- ஜோதிடர் சுப்பிரமணியன்.

Tags:    

Similar News