கதம்பம்

பழையது சாப்பிடலாம் வாங்க!

Published On 2024-05-07 12:15 GMT   |   Update On 2024-05-07 12:15 GMT
  • கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.
  • பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

ஒரு நாள் மாலை கலைவாணர் தம் நண்பர்கள் ப. ஜீவானந்தம், தென்காசி சண்முகசுந்தரப் புலவர் ஆகியோருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

"ஆமாம்.. சம்பாதிக்கிறீர்கள், சடுதியில் செலவு செய்து விடுகிறீர்களே! ஊராருக்கெல்லாம் உதவும் தாங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா?" பேச்சுக்கு இடையே சண்முகசுந்தரப் புலவர் கேட்ட கேள்வி இது.

அதற்குப் பதிலாக கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்..

ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து, வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.

இதேபோல் பலமுறை பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண் சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.

உடனே அந்த இளைஞர் கேட்டார். எப்போது பார்த்தாலும் நான்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்?

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்? என்று அவர் கூறியவுடன் மனைவி, நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?

உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலளித்தார்.

கதையை முடித்த கலைவாணர் தொடர்ந்தார், "நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா? அவர்களே உழைத்துச் சுடுசோறு சாப்பிடட்டுமே!" என்றார்.

-சந்திரன் வீராசாமி

Tags:    

Similar News