கதம்பம்

வெயிலால் ஏற்படும் பாதிப்புகள்

Published On 2024-05-01 15:27 IST   |   Update On 2024-05-01 15:27:00 IST
  • வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.
  • குளிர் நீரை உடல் முழுவதும் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால்

வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் ( HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி வருவது போல இருப்பது ஆகிய அறிகுறிகள் வெப்ப அயர்ச்சியைக் குறிக்கின்றன..

உங்களது உடலின் மையப்பகுதி வெப்பம் தாங்கும் அளவை விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களின் உடல் கொடுக்கும் சமிக்ஞை இது.

நாம் மகிழ்வுந்திலோ இயந்திர ஈருருளியை அதிக நேரம் செலுத்தும் போது "இஞ்சின் ஓவர் ஹீட்" சிம்பல் வருமே அது போலத்தான் இதுவும் .

உடனே செய்ய வேண்டியது,

- வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.

- பைக் ஓட்டிக் கொண்டிருந்தால் பைக்கை ஓரம் கட்டி விட வேண்டும்.

- குளிர் நீர் / பழச்சாறுகள் / இளநீர் / மோர் / தர்பூசணி ஆகியவற்றை வாங்கி அருந்த வேண்டும்.

- குளிர் நீரில் குளியல் போடலாம் அல்லது ஷவரில் குளிக்கலாம் ( ஷவர் நீரும் சூடாக வரும் - கவனம்)

குளிக்க இயலாதவர்கள்,

- குளிர் நீரை உடல் முழுவதும் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

ஆடைகளையும் நீரால் நனைத்துவிடுவது நல்லது.

- பாதங்கள் மற்றும் கைகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி இருப்பதன் மூலம் உடலின் மையப்பகுதி வெப்பத்தை தணிக்க முடியும்.

இந்த வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகளை அலட்சியம் செய்தால் வெப்ப வாதத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

- சிந்திக்க இயலாத பிதற்றல் நிலை ,

- மூர்ச்சையாகிவிடுதல் போன்றவை ஏற்படும் .

இந்த நிலையில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இத்தகைய நிலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி,

- மூச்சு விடுவதையும் இதயம் துடிப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதயத்துடிப்போ மூச்சோ இல்லாத நிலையில் சிபிஆர் எனும் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் வழங்கும் முதலுதவியை வழங்க வேண்டும்.

மூச்சு விடுகிறார், இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது என்றால்

- உடனே அவரை நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

- அவரது ஆடைகளைக் களைந்து விட்டு

- ஐஸ்கட்டி நிரப்பப்பட்ட நீரில் ( நீரின் வெப்பம் 15 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருப்பது நல்ல பலன் தரும்) அவரது கழுத்துப் பகுதி வரை அமிழ்த்தி விட வேண்டும். ( இதுவே வெப்ப வாதம் வந்தவரைக் காப்பாற்ற உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்)

ஐஸ்கட்டி நீரில் அமிழ்த்திய ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு டிகிரி செல்சியஸ் மைய வெப்பம் குறையும் .

இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்..

ஐஸ்கட்டி இல்லாத நிலையில் குளிர்ந்த நீரில் அமிழ்த்தலாம்.

அமிழ்த்தும் அளவு நீர் இல்லாத நிலையில் கிடைத்திருக்கும் நீரைக்கொண்டு துணியில் நனைத்து உடல் முழுவதும் ஒத்தி எடுக்கலாம்..

கை விசிறி கொண்டோ அல்லது மின் விசிறியைக் கொண்டோ அவர் மீது காற்று வீசுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பானங்களைப் பருகும் நிலைக்கு அவர் வந்ததும் , பருகுவதற்கு குளிர்ந்த நீர் / பழச்சாறு / தாது உப்புகள் நிரம்பிய ஓ ஆர் எஸ் திரவம் போன்றவற்றைக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.

அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றும் சிகிச்சை வழங்குவதும் பலனளிக்கும்.

-டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

Tags:    

Similar News