கதம்பம்

கோடை வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க...

Published On 2024-04-02 11:00 GMT   |   Update On 2024-04-02 11:00 GMT
  • வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல்.
  • நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும் வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும்.

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது.

இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை/ அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல்.

உடல் சூடாவதை தடுப்பது எப்படி?

1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம்.

இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.

3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும்.

ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.

பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது.

வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.

4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை, வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.

5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம்.

அடுத்த நடவடிக்கை.. இதை மீறியும் சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.

நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும் வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும்.

நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும்.

அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும். மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்.

இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை நீர் சத்து குறைதல்..

இதை எப்படி அறியலாம்?

- நாக்கு வறண்டு போதல்

- சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்

- தசைப்பிடிப்பு

- தலை சுற்றல்

- கை கால் தளர்வு

போன்ற அறிகுறிகளால் அறியலாம்

இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?

1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.

நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும்.

இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும்.

பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. இந்த தண்ணீரை இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம்.

செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது.

குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம் முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும்.

ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்தமண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.

மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.

ஹை அலர்ட் தேவைப்படுவோர்..

1. குழந்தைகள்

2. முதியோர்கள்

3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள்

4.கர்ப்பிணிகள்

5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள்

6. அதிகமாக பயணம் செய்பவர்கள்.

-டாக்டர் .ஃபரூக் அப்துல்லா

Tags:    

Similar News

தம்பிடி