கதம்பம்

மலச்சிக்கலுக்கு நீராகாரம்

Published On 2024-03-11 11:00 GMT   |   Update On 2024-03-11 11:00 GMT
  • மலச்சிக்கல் சரியாவது மட்டுமல்ல உடல் குளிர்ச்சியடையும்.
  • கோடையில் மட்டுமல்ல எப்போதுமே உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

நீராகாரம், பழைய சோறு பற்றி நிறைய தகவல் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மலச்சிக்கலை நீக்கும் தன்மை நீராகாரத்துக்கு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரவில் சோற்றில் நீர் ஊற்றும்போதே பச்சை மிளகாயையும், சின்ன வெங்காயத்தையும் வெட்டிப்போட்டு விட வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் ஆகாரமாக என்று சொல்வதைவிட நீர் அருந்துவதற்குப்பதில் நீராகாரத்தை அருந்திப் பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

இந்த தகவல் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், வழக்கமாக நாம் காலை உணவாக பழைய சோறு சாப்பிடும்போது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்வோம். ஆனால், முந்தினநாள் இரவே வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து காலையில் எழுந்ததும் குடித்தால் அதன் பிரதிபலிப்பே வேறு.

`கடுக்காய் சாப்பிடுறேன், திரிபலா சாப்பிடுறேன், பழம் சாப்பிடுறேன், நிறைய தண்ணி குடிக்கிறேன்... ஆனாலும் சரியா மலம் போகல...'ன்னு சொன்ன ஒருவரிடம் இந்த வழிமுறையை பின்பற்றச் சொன்னேன். இதை முயற்சித்த முதல்நாளே பலன் கிடைத்ததாக சொன்னார். எத்தனையோ பேர் மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித பக்கவிளைவும் இல்லாத இந்த வழிமுறையை பின்பற்றலாமே? மலச்சிக்கல் சரியாவது மட்டுமல்ல உடல் குளிர்ச்சியடையும். கோடை தொடங்கிவிட்டதால் தாராளமாக முயற்சிக்கலாம்.

கோடை தொடங்கிவிட்டதால் சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, போண்டா, பஜ்ஜி, வடை போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடவே காரம் அதிகமான உணவுகளையும், சிக்கன், நண்டு போன்ற சூட்டினை கிளப்பும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டவருக்கு மூலம் வெளிப்பட்டதாகச் சொல்லி ஆதங்கப்பட்டது தனிக்கதை. கோடையில் மட்டுமல்ல எப்போதுமே உணவுமுறையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

- எம்.மரிய பெல்சின்

Tags:    

Similar News

தம்பிடி