கதம்பம்

அவன் தான் ஆண்பிள்ளை!

Published On 2024-02-07 11:45 GMT   |   Update On 2024-02-07 11:46 GMT
  • நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம்.
  • கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு.

உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி.

கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? ....

முதல் இலக்கணம் இறப்பும், பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன்.

பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும், பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும், பிறப்பும் கிடையாது.

இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி,சங்கர ஜெயந்தி இப்படி..

எந்தக் கோவிலிலாவது சிவ ஜெயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு, இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம்.

-வாரியார்

Tags:    

Similar News

தம்பிடி