கதம்பம்
null

இந்த அறிகுறி இருந்தால்..

Published On 2023-11-20 17:15 IST   |   Update On 2023-11-20 17:49:00 IST
  • மூன்று மாத ரத்த சராசரி சர்க்கரை அளவையும் பார்த்து விடுங்கள்.
  • உணவு , உடற்பயிற்சி உள்ளடக்கிய வாழ்வியல் மாற்றத்தை உடனே செய்ய வேண்டும்.

இரவு உறக்கத்தில் வழக்கத்துக்கு மாறாக சிலமுறை சிறுநீர் கழிக்க எழுதல்..

பசி அதிகம் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இருத்தல் . அவ்வளவு சாப்பிட்டும் பசி அடங்காமல் இருத்தல்..

டயட் எதிலும் இல்லாமலும் உடல் பயிற்சி எதுவும் செய்யாமலும் திடீரென்று எடை குறைய ஆரம்பிப்பது..

சிறுநீர் கழித்த இடத்தில் வாசனை வருவது. எறும்பு மொய்ப்பது...

நுரை நுரையாக சிறுநீர் வெளியேறுவது ..

பாதங்கள் இரண்டிலும் எரிச்சல்/ மதமதப்பு தோன்றுதல்..

பிறப்புறுப்பில் புண் அடிக்கடி தோன்றுவது..

ஆண்களுக்கு முன்தோல் வெடிப்பும் புண்ணும், பெண்களுக்கு பிறப்புறுப்பைச் சுற்றி அரிப்பும் புண்களும் தோன்றுவது..

மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றுமாயின் எந்த வயதினராயினும் சரி...உடனே தாமதிக்காமல் காலை வெறும் வயிற்றிலும் உணவு சாப்பிட்ட இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகும் ரத்த க்ளூகோஸ் அளவுகளை பரிசோதனை செய்யவும். கூடவே HbA1c எனும் மூன்று மாத ரத்த சராசரி சர்க்கரை அளவையும் பார்த்து விடுங்கள்.

காலை வெறும் வயிற்றில் க்ளூகோஸ் 100mg/dlக்கு மேல் 125க்குள்,

உணவுக்குப்பின் 140mg/dl க்கு மேல் 200க்குள் இருந்தால் Hba1c 5.6 முதல் 6.5 இருந்தால் நீரிழிவானது உடலில் "அனா ஆவன்னா" எழுதத் தொடங்கியிருப்பதை அறிக. இதை Prediabetes என்கிறோம்.

உணவு , உடற்பயிற்சி உள்ளடக்கிய வாழ்வியல் மாற்றத்தை உடனே செய்ய வேண்டும்.

உடனடியாக சீனி, சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி,  தேனி இதர லாஹிரி வஸ்துகள், மது, புகை, பேக்கரி உணவுகள் என அனைத்தையும் நிறுத்தி விட்டு தினசரி ஒரு மணிநேரம் நடை சேர்த்தால் நீரிழிவை அண்ட விடாமல் தடுக்கலாம்.

வெறும் வயிற்றில் 126mg/dlக்கு மேல் இருந்தால் இரண்டு மணி நேர சர்க்கரை 200mg/dlக்கு மேல் HbA1c 6.5க்கு மேல் என்றால் நீரிழிவு நம் உடலில் தனது சுயசரிதையை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

உடனடி வாழ்வியல் மாற்றங்களுடன் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகளும் தேவைப்படும். கட்டாயம் மருத்துவ நிபுணரிடம் முறையான கண்காணிப்பும் அவசியம் .

நீரிழிவு நோயர்கள் அனைவரையும் மாவுச்சத்தை குறைத்து உண்ணும் உணவு முறைக்கு அழைக்கிறேன்.

நிச்சயம் நாவைக் கட்டுப்படுத்தினால் நீரிழிவையும் கட்டுப்படுத்திட முடியும்.

-டாக்டர்.ஃபரூக் அப்துல்லா

Tags:    

Similar News