கதம்பம்

உயிருக்கு கொடுக்கும் ஊதியம்

Published On 2023-11-10 15:21 IST   |   Update On 2023-11-10 15:21:00 IST
  • வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான்.
  • வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் நன்றாக படித்து, நான் படித்து விட்டேன் என்று சொன்னால், "அப்படியா, எங்க நாலு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்" என்று தானே உலகம் சொல்லும்.

படித்து, அறிந்து இருந்தாலும், தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பள்ளியோ, கல்லூரியோ சான்றிதழ் வழங்கினால் தான் உலகம் ஏற்றுக் கொள்ளும்.

இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார், இவர் இரண்டாம் வகுப்பு என்று மற்றவர் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் உலகம் நம்பாது.

வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான். அதில் நாம் தேர்வு பெற்றோமா இல்லையா என்று உலகம் சொல்ல வேண்டும். அந்த உலகம் சொல்வதுதான் "புகழ்".

"அவர் நல்ல மனிதர், ஏழைகளுக்கு உதவி செய்வார், ஒருத்தரை ஒரு வார்த்தை கடிந்து பேச மாட்டார், நல்ல படித்த மனிதர், சிறந்த நடிகர், வள்ளல் " என்றெல்லாம் ஒருவரை உலகம் பாராட்ட வேண்டும். அந்த பாராட்டுதல்தான் புகழ் என்பது.

ஒருவன் இல்லறத்தை செம்மையாக நடத்துகிறான் என்பதற்கு சான்று, அவன் பெறும் புகழ். நல்ல மனைவியைப் பெற்று, இல்லற கடமைகளை சரிவர செய்து, விருந்தோம்பி, நடுவுநிலை தவறாமல் இருந்து, செய்நன்றி மறவாமல் இருந்து, இனியவை பேசி, அடக்கமாய் இருந்து, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் இருந்து, ஊருக்கும், தனி மனிதர்களுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து ஒருவன் சிறப்பான இல்லறம் நடத்தினால், அவனுக்கு நல்ல பேர் கிடைக்கும்.

வள்ளுவர் சொன்ன ஒவ்வொன்றையும் சரியானபடி செய்து வந்தால், புகழ் - தானே வரும். வள்ளுவர் கூறுகிறார் :

"வாழ்வின் நோக்கம் என்ன?

இந்த வாழ்க்கை வாழ்வதின் பலன் என்ன?

எதுக்காக நாம் வாழ்கிறோம்?

எப்படி வாழ வேண்டும்? என்று கேட்டால், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், புகழோடு வாழ்வதும், இந்த இரண்டைத் தவிர வாழும் உயிர்களுக்கு வேறு ஒரு பயனும் இல்லை" என்கிறார் .

பாடல் :

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

பொருள்:

ஈதல் = வறியவர்களுக்கு உதவுதல்

இசைபட = அதனால் வரும் புகழோடு

வாழ்தல் = வாழ்தல்

அதுவல்லது = அதைத் தவிர

ஊதியம் = பயன் ஏதும்

இல்லை உயிர்க்கு = இல்லை இந்த உயிர்களுக்கு

ஈதல், இசைபட வாழ்தல் - என்று இரண்டு விடயங்களைக் கூறி இருக்கிறாரே, உதவி செய்யாமல், வேறு விதத்தில் புகழ் வந்தால் பரவாயில்லையா?

ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி, நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்று, சிறந்த நடிகர், எழுத்தாளர், பாடகர் என்றெல்லாம் புகழ் அடைந்தால் போதாதா? - என்றால் போதாது என்கிறார் .

ஈதல், இசைபட வாழ்தல் "அது" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார்.

ஈதல் மூலம் வரும் புகழ் தான் வாழ்வின் பயன். வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும்.

" உயிர்க்கு" என்று பொதுவாகச் சொன்னாலும், இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். விலங்குகள், தன்னைவிட வறுமையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதில்லை. எனவே, உயிர் என்றது மனித உயிர்கள் என்று கொள்ள வேண்டும் என்கிறார்கள் சான்றோர்கள்.

-பி.டி.அரசு

Tags:    

Similar News