தூக்கம் கெட்டால் வாழ்க்கை கெடும்...
- தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும்.
- தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும்.
மணி எட்டு ஆச்சுடா... இன்னுமா தூங்குறே என்று அம்மாவோ, அப்பாவோ அலாரம் அடித்த பிறகுதான் பெரும்பாலும் படுக்கையில் இருந்து லேசாக புரள்வார்கள்.
ஆனாலும் எழும்ப மாட்டார்கள். ஏம்மா தூக்கத்தை கெடுக்கிறே என்றுதான் கோபப்படுவார்கள். ஆனால் இப்போது தூக்கம் வராததே பலருக்கு பிரச்சினையாகி வருவது ஆச்சரியமாகி உள்ளது.
பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல்லா நோய் சார்ந்த பிரிவுகளைபோல் தூக்க குறைபாடு சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த துறைக்கு பிரத்யேகமாக மருத்துவ குழுவினரும் இருக்கிறார்கள். இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது:-
ஒவ்வொருவருக்கும் தூக்கம்தான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம். அயர்ந்து தூங்கி எழுந்தாலே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.
தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. இருப்பினும் வயதுக்கு ஏற்ப தூக்க முறையில் மாற்றமும் வரும். உதாரணமாக வயதானவர்களுக்கு இரவில் தூக்கம் குறையலாம். அதற்கு ஈடுகட்டும் வகையில் பகலில் தூங்குவார்கள்.
தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும். அன்றாடம் செய்யும் வேலை திறனை குறைக்கிறது.
அது மட்டுமல்ல. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்றவற்றை அதிகரிக்க செய்யும். உடலில் இருக்கும் பல்வேறு வலிகள், மோசமான உணவு பழக்கங்கள், பணி நேர மாறுதல்கள், மனஅழுத்தம், கவலை, ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.
ஆஸ்துமா, கீல்வாதம், நெஞ்செரிச்சல், நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களாலும் தூக்கம் கெடும். ஒரு நோயாளியின் தூக்கமின்மைக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். சிறந்த தூக்க பழக்கத்தை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்.
* சோர்வாக உணரும்போது மட்டும் தூங்க வேண்டும்.
* தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் சூடான பால் குடிக்கலாம்.
* படுக்கை அறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.
* படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
* படுக்கையில் டி.வி. பார்ப்பது, படிப்பது, செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் மூழ்கி இருப்பது, கவலைப்படுதலை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கலைத்துவிடும்.
தூக்க கோளாறுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது.
நேத்து ராத்திரி...யம்மா தூக்கம் யோச்சுடி...யம்மா என்பது இரவு சுகமான அனுபவமாக இருக்கலாம்.
எந்நாளுமே தூக்கம் போச்சே என்று புலம்பினால் அது சோக வாழ்க்கையின் அறிகுறிதான்.