- உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் பப்பாளி.
- பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன.
செரிமானமடைய வைக்கும் பப்பாளியின் என்சைம், பப்பாளி பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.
பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.
டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பப்பாளி இலைச்சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பப்பாளி பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டுவலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்கு பப்பாளி பழம் உதவுகிறது.
- கலை தமிழ் பாலா