கதம்பம்

பாரத்தை இறக்கி வைக்கலாமே...

Published On 2023-04-27 14:02 IST   |   Update On 2023-04-27 14:02:00 IST
  • உங்களால் சுலபமாக தூக்கக்கூடிய பொருள் கூட உங்களை வென்று விடுகிறதல்லவா!
  • ஒரே எடை கொண்ட டம்ளர் எப்படி தன் பாரத்தைக் கூட்டிக்கொண்டே போனது எனப் பார்த்தீர்களா?.

மனோதத்துவ வல்லுனர் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அந்த கல்லூரிக்கு வந்திருந்தார். ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வந்தார்.

மாணவர்கள் இந்த ஆள் ஏதோ பெரிய பிரசங்கத்தை எடுத்து கடுப்பேத்தப்போகிறார் என நினைத்தனர்.

வல்லுனர் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு தன் உதவியாளரிடம் சொன்னார். அவரும் ஒரு கண்ணாடி டம்ளரில் குடிநீர் கொண்டு வந்தார்.

வல்லுனர், "நான் பெரிதாக உங்களிடம் எதுவும் பேசப்போவதில்லை. இந்த குடிநீர் டம்ளரை வைத்து ஒரு சின்ன பரிசோதனை செய்யப்போகிறோம்" என்றார்.

மாணவர்கள் குழம்பிப் போயினர். இது என்ன வேதியியல் வகுப்பா?. இவர் இதை வைத்து என்ன பரிசோதனை செய்யப் போகிறார்?. என ஆவலுடன் காத்திருந்தனர்.

ஒரு மாணவனை தன் அருகே அழைத்தார். கையை நீட்டச் சொல்லி அவன் கையில் அந்த தண்ணீர் டம்ளரை வைத்தார். "எவ்வளவு பாரமாக இருக்கிறது?'' எனக் கேட்டார்.

மாணவன் இது ஒன்றும் பாரமில்லை என்றான். அப்படியே வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்.

பத்து நிமிடம் ஆனவுடன் அந்த மாணவனிடம் "டம்ளர் பாரமாக இருக்கிறதா?'' எனக் கேட்டார். "ஆமாம்.. கொஞ்சம் பாரமாக ஆகிவிட்டது'' என மாணவன் சொன்னான்.

அரைமணி நேரம் கையில் வைத்திருந்தவன் "கைகள் இந்த பாரத்தை சுமக்கும் வலிமையை இழந்துவிட்டது'' எனச் சொல்லி டம்ளரை கீழே வைத்துவிட்டான்.

வல்லுனர் மாணவர்களிடம் "ஒரு மணி நேரம் இந்த டம்ளரை கையில் வைத்திருந்தால் என்ன ஆயிருக்கும்..'' என கேட்டார்.

மாணவர்கள் "அந்த டம்ளரின் எடை ஒரு டன் அளவிற்கு கூடியிருக்கும்'' என்றனர்.

"ஒரு நாள் வைத்திருந்தால்..?''

"அந்த பாரம் நம்மை அழுத்தியிருக்கும்''.

"இரண்டு நாள் வைத்திருந்தால்..?''

"மயங்கி கீழே விழுந்திருப்போம். மருத்துவமனைக்கு செல்லும் நிலை வந்திருக்கும்'' என்றனர்.

வல்லுனர் சொன்னார்.. "ஒரே எடை கொண்ட டம்ளர் எப்படி தன் பாரத்தைக் கூட்டிக்கொண்டே போனது எனப் பார்த்தீர்களா?.

உங்களால் சுலபமாக தூக்கக்கூடிய பொருள் கூட உங்களை வென்று விடுகிறதல்லாவா!. அதனால் மிக சாதாரணமான எண்ணங்கள் என நினைத்து நீங்கள் முதலில் சேர்த்து வைக்கிறீர்கள். அதுவே நாட்கள் செல்ல செல்ல பாரம் கூடி உங்களையே அழித்து விடுகிறது'' என்றார்.

மாணவர்கள் கைதட்டி அவர் கருத்தை வரவேற்றனர். அதனால் எல்லா எண்ணங்களையும் அதன் முதல் கட்டத்திலேயே இறக்கி வைத்துவிடுங்கள். அப்போது தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

- சதீஸ்

Tags:    

Similar News