- பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்கப்பட்டிருக்கின்றன.
- சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும் அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது.
உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது. எனினும் இங்கு மட்டுமே 47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.
இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.
உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது. பல வகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து பல தாவரங்களை கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம். மேலும் பல அரிய தாவரங்கள் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.
நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவர குருடினாலும் இவை அழியும் அபாயத்தில் உள்ளன.
பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும் அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது. இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய நிலை வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்.
தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!
நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.
-லோகமாதேவி