கதம்பம்

கண்ணில் துலங்கும் கடவுள்!

Published On 2024-03-03 11:15 GMT   |   Update On 2024-03-03 11:15 GMT
  • அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என, நம் பிறவிப்பிணித் தீர, நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்கிறார்.
  • ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான் ! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள் ! நன்றைத் தான் சொன்னார்கள்.

இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு!

"மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த

அணியே அணியும் அணிக் கழகே அணுகாதவர்க்கு

பிணியே பிணிக்குமருந்தே அமரர் பெருவிருந்தே

பணியே னொருவரைநின் பத்மபாதம் பணிந்தபின்னே"

அபிராமிபட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல் இது !

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக சொல்லவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர்.. அப்படியல்ல !

மணியே - கண்மணியே..

மணியின் ஒளியே - கண்மணியிலுள்ள ஒளியே..

ஒளிரும் மணிபுனைந்த அணியே - ஒளிபொருந்திய மணியை உடைய கண்ணே..

அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே..

அணுகாதவர்க்கு பிணியே -கண்மணி ஒளியை அணுகாதவர்களுக்கு பிறவிப் பிணியே..

பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணிதீர மருந்து கண்மணி ஒளியே..

அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இதுதான்..

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியே இறைவனின் தாமரை திருவடி என்பது, அதை பணிந்த நான் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.

இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல்போதும் ஞானம் பெறுவதற்கு!

அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என, நம் பிறவிப்பிணித் தீர, நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்கிறார்.

இதையேதான் வள்ளலாரும்,

'நல்ல மருந்து இம்மருந்து

சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து

அருள்வடிவான மருந்து

அருட்பெருஞ்ஜோதி மருந்து' என்கிறார்.

"கண்ணின் மணியை கருத்தின் தெளிவை

விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

எண்ணி எண்ணி இரவும் பகலுமே

நண்ணுகின்றவர் நாந்தொழுந் தெய்வமே"

என்று தாயுமானசுவாமிகள் ஞானம் உரைக்கிறார் !

இறைவன், கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார் தாயுமான சுவாமிகள்.

இதுதான் உன்னதமான ஒப்பற்ற ஞானவழி !

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான் ! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள் ! நன்றைத் தான் சொன்னார்கள்!

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

Tags:    

Similar News

இலவசம்