கதம்பம்

அதுதான் துறவு

Published On 2023-11-18 14:39 IST   |   Update On 2023-11-18 14:39:00 IST
  • துறவியோ, சொகுசு மெத்தையில், அழகுக் கூடாரத்தில், தங்கக் கட்டிலில் இருந்தார்...
  • என்னுடைப் பிச்சைப் பாத்திரத்தை, உங்கள் கூடாரத்திலேயே வைத்துவிட்டேன்... அது இல்லாமல் என்ன செய்வேன்?

துறவு என்பது 'பொருள்கள்' சம்பந்தப்பட்டது அல்ல...

'எண்ணங்கள்' சம்பந்தப்பட்டது..

துறவு 'வெளியே' சம்பந்தப்பட்டதல்ல...

'உள்ளே' சம்பந்தப்பட்டது.

துறவு 'உலகம்' சம்பந்தப்பட்டதல்ல...

'ஒருவன்' சம்பந்தப்பட்டது.

ஒருநாள் ஒரு பிச்சைக்காரன், ஒரு துறவியின் இருப்பிடத்திற்கு சென்றான்...

துறவியோ, சொகுசு மெத்தையில், அழகுக் கூடாரத்தில், தங்கக் கட்டிலில் இருந்தார்...

இதைக் கண்ட பிச்சைக்காரன் அதிர்ச்சியடைந்து, 'இது என்ன அநியாயம்' என்று கூவினான்...

பின்னர் அவரிடம்... "ஐயா, மதிப்பிற்குரிய துறவியாரே! உங்கள் ஞானம் பற்றியும், துறவு பற்றியும், பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன்...

ஆனால், உமது இந்தக் கோலம்...

சொகுசான சுற்றுப்புறம்...

என்னைக் குழப்புகிறதே" என்றான்...

துறவி சிரித்துக் கொண்டே சொன்னார்...

"இவைகளை எல்லாம் இப்படியே விட்டுவிட்டு உன்னுடன் வர நான் தயார்... இப்பொழுதே தயார்..."

சொல்லியபடியே துறவி உடனே எழுந்தார்...

விறுவிறுவென பிச்சைக்காரனுடன் நடந்தார்...

செருப்பைக் கூட அணியவில்லை...

சிறிது தூரம் சென்றவுடன் பிச்சைக்காரன் பதைபதைத்துக் கூறினான்...

"என்னுடைப் பிச்சைப் பாத்திரத்தை, உங்கள் கூடாரத்திலேயே வைத்துவிட்டேன்...

அது இல்லாமல் என்ன செய்வேன்?

தயவு செய்து கொஞ்சம் இங்கேயே இருங்கள்...

நான் போய் கொண்டு வந்துவிடுகிறேன்!"

துறவி பெரிதாகச் சிரித்தார்...

பின் கூறினார்:

"என் நண்பனே! என் கூடாரத்தில் உள்ள தங்கக் கட்டில் பூமியின் மேல்தான் நிற்கிறது...என் இதயத்தின் மேல் அல்ல.

ஆனால், உன் பிச்சைப் பாத்திரம் உன்னை இந்த துரத்து துரத்துவதாக இருக்கிறதே!"

"உலகத்தில் இருப்பது பற்று இல்லை...

உன் மனதில் உலகம் இருப்பதுதான் பற்று...

உன் மனதிலிருந்து உலகம் மறைந்துவிட்டால்...

அதுதான் துறவு."

-ஓஷோ

Tags:    

Similar News