கதம்பம்

மஞ்சள் கரு ஆபத்தானதா..?

Published On 2023-05-09 05:10 GMT   |   Update On 2023-05-09 05:10 GMT
  • உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது.
  • உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை.

பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த அறிவுரைகளில் அளவற்ற அச்சம் இருக்கிறதே அன்றி அறிவியல் இல்லை.

முட்டையின் மஞ்சள் கரு மேல் இந்தப் பழி ஏன் வந்தது? அதில் கலந்திருக்கும் கொலஸ்ட்ரால் எனும் பொருளால் மட்டுமே அது தீண்டத்தகாத பொருளாக மாறி நிற்கிறது. கொலஸ்ட்ரால் என்பது அத்தனை தீண்டத்தகாத பொருளா?

முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் ஏ - கண் நலம்.

கால்சியம் / விட்டமின் டி - எலும்பு நலம்

பொட்டாசியம் / மெக்னீசியம் - இதய நலம்

விட்டமின் பி6 / பி12 - நரம்பு மண்டல நலன்

ஆகிய அனைத்து நல்லவைகளையும் வைத்திருக்கும் மஞ்சள் கருவை அதில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி குப்பையில் வீசுவதும் தகுமோ?

உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது.

நமது ஒவ்வொரு செல்களின் பாதுகாப்பு அரண்களான ப்ளாஸ்மா மெம்ப்ரேன் எனும் சுவர் பாஸ்ஃபோ லிபிட் எனும் கொலஸ்ட்ரால் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை. நம் இனம் தளைத்தோங்க உதவும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவை.

இதன் காரணமாகத் தான் நாம் உண்டாலும் உண்ணாவிரதத்தில் இருந்தாலும் கொலஸ்ட்ராலை நமது கல்லீரல் உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் விளங்குகிறது.

இதய நோய்க்கும் இதய ரத்த நாள அடைப்புக்கும் மூளை ரத்த நாள அடைப்புக்கும் உணவில் மாவுச்சத்து அதிகமாக உட்கொள்வதும், இனிப்பு சுவை கொண்ட உணர்வுகளுக்கு அடிமையானதும், மது புகை போன்ற போதை வஸ்துகளும், உடல் உழைப்பற்ற மன அழுத்தம் நிரம்பிய பணத்தை மட்டுமே நோக்கி ஓடக்கூடிய நமது வாழ்க்கை முறை தான் காரணம்.

அதை விடுத்து முட்டையில் உள்ள மஞ்சள் கரு மேல் மட்டும் பழியைப் போட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியுமா ? கொலஸ்ட்ராலை வில்லனாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டும்.

- டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்
அருமருந்து