உண்மை எது

உண்மை எது: "ஜவான்" திரைப்படத்தை உண்மையிலேயே அமிர்கான் புகழ்ந்தாரா?

Published On 2023-09-14 09:49 GMT   |   Update On 2023-09-14 09:49 GMT
  • "ஜவான்" திரைப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார்
  • 2015-ல் சல்மான்கான் கதாநாயகனாக நடித்து வெளியானது "பஜ்ரங்கி பாய்ஜான்"

தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த "ஜவான்" திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மற்றொரு பிரபல இந்தி நடிகரான அமிர்கான், "ஜவான்" திரைப்படத்தையும், அதன் கதாநாயகன் ஷாருக்கானின் நடிப்பையும் பாராட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது. அந்த வீடியோவில் நடிகர் அமிர்கான், "படத்தை பார்த்தீர்களா? மிக நல்ல திரைப்படம். அவரது நடிப்பில் இதுதான் மிக சிறப்பான படம். அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பாருங்கள்" என கூறுவது தெரிகிறது.

இதனை பகிர்ந்த பயனர்களில் ஒருவர் "அமிர்கானின் ஜவான் பட விமர்சனம்" என ஒரு குறுஞ்செய்தியையும் இத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார். ஆனால், ஆய்வில் இது தவறான செய்தி என்றும் அந்த வீடியோ பொய் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் 2015-ல் வெளியான திரைப்படம் "பஜ்ரங்கி பாய்ஜான்." அந்த திரைப்படத்தை அப்போது கண்டு ரசித்த அமிர்கான், கதாநாயகன் சல்மான் கானையும், அத்திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனரையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் வெகுவாக பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த நீண்ட வீடியோவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், மேலே சொன்ன வாசகங்கள் இடம்பெறுகிறது. ஆய்வில், "பஜ்ரங்கி பாய்ஜான்" திரைப்படத்தை அமிர்கான் பாராட்டும் நீண்ட வீடியோவை ஆங்காங்கே வெட்டி தொகுத்து "ஜவான்" திரைப்படத்தை பாராட்டுவதை போல் உருவாக்கி வெளியிட்டுள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை "ஜவான்" திரைப்படம் குறித்து அமிர்கான் எத்தகைய விமர்சனமும் செய்ததாக உறுதியான தகவல் இல்லை. இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

Similar News