செய்திகள்
உச்ச நீதிமன்றம்

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை - வைரல் தகவலை நம்பாதீங்க

Published On 2021-08-13 05:15 GMT   |   Update On 2021-08-13 05:15 GMT
டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளை நாட்டின் மூன்று நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


உச்ச நீதிமன்றத்தை விரிவுப்படுத்தி நாட்டின் முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் மூலம் நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என மாநிலங்கள் சார்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், "சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைய உள்ளது. இந்த முடிவை எடுத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்" என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. 

இவ்வாறான நிகழ்வு அரங்கேறி இருப்பின், அதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாவதோடு, நாடு முழுக்க விவாத பொருளாகவும் மாறி இருக்கும். எனினும், இந்த விவகாரத்தில் இதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. மேலும் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ நிறுவனமும் இந்த தகவலில் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News