செய்திகள்
சீமான்

வேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் - சீமான்

Published On 2019-08-10 05:42 GMT   |   Update On 2019-08-10 05:42 GMT
வேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமிக்கு 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.
வேலூர் தேர்தல் முடிவு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை கட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் இருந்து வருகிறது. எந்த தேர்தலையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதே நேரத்தில் வெற்றி-தோல்வியை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியை செய்து வருகிறோம்.

வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை நியாயமான வாக்குகளாக கருதுகிறோம். எப்போதுமே தமிழகத்தை பொறுத்தவரையில் தேர்தல் களத்தில் பணமே பிரதானமாக உள்ளது. இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகிய இரண்டுமே பணப்பட்டுவாடா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

ஆனால் நாங்கள் மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். அந்த வகையில் தான் வேலூர் பாராளுமன்ற தேர்தலையும் எதிர்கொண்டோம். நாம் தமிழர் கட்சியை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் பிரச்சினை. ஆனால் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக களத்தில் நிற்போம். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யாமல் அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் மக்கள் எங்களுக்கு கூடுதலாக வாக்களிப்பார்கள்.

மாற்றம் என்பது ஒரே நாளில் வந்து விடாது. தமிழகத்தில் நிச்சயம் ஒரு நாள் அரசியல் மாற்றம் ஏற்படும். அதனை நாம் தமிழர் கட்சியே உருவாக்கும்.

கேள்வி:- வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளுக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது ஏன்?

பதில்:- அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே வேண்டாம் என்கிற மனநிலை தான் காரணம். தி.மு.க. வந்துவிடக்கூடாது என்ற ஒரு பிரிவினரும் அ.தி.மு.க. வந்துவிடக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டு போட்டதன் விளைவாகத்தான் இவ்வளவு இழுபறி ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன்.

கே:- அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி மட்டும் களத்தில் இருந்தும் ஓட்டுக்கள் குறைவாக கிடைத்தது ஏன்?

ப:- நான் ஏற்கனவே கூறியபடி 2 கட்சிகளும் வேண்டாம் என்ற மனநிலையில் மாறி மாறி விழுந்த ஓட்டுகளால் நாம் தமிழர்கள் கட்சிக்கு குறைவான வாக்குகள் கிடைத்து இருக்கலாம். இருப்பினும் நாம் தமிழர் கட்சி எப்போதும் மக்களை நம்பி களத்தில் நிற்கும். குளத்திடம் கோபித்துக்கொண்டு குளிக்காமல் சென்றால் யாருக்கு நஷ்டம் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் தேர்தல் தோல்விக்காக யாரிடமும் நாம் தமிழர் கட்சி கோபித்து கொள்ளாது. போர்க்களத்தில் வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம். எனவே மாற்றத்தை நோக்கி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பயணிக்கும். அதில் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News