செய்திகள்

தினகரனால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும்- முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி

Published On 2019-06-10 10:32 GMT   |   Update On 2019-06-10 10:32 GMT
டி.டி.வி. தினகரனால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.

தர்மபுரி:

முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளருமான பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகளை பதவி ஆசை காட்டி அ.தி. மு.க.வில் இணைத்து வருகின்றனர். தலைவர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக சென்றுள்ளனர். யார் சென்றாலும் அ.ம.மு.க. வீறு நடைபோட்டு செல்லும்.

ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அப்போதே நாங்கள் வலியுறுத்தினோம். ஒற்றை தலைமையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முன்பு கூறிய கருத்தை மீண்டும் நான் நினைவு படுத்துகிறேன். அ.தி.மு.க.விற்கு பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் சசிகலா தான் வரவேண்டும் என்று அவர்கள் முன்பு குரல் கொடுத்ததை தற்போது அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்த பிறகு தான் அ.தி. மு.க.வில் பிளவு ஏற்பட்டது. அதன்பின்னர் கூவத்தூருக்கு சென்று 122 எம்.எல். ஏ.க்கள் துணையோடு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சந்தர்ப்பத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.


ராஜன்செல்லப்பாவை விட்டு ஓ.பன்னீர்செல்வம் பேச சொல்கிறார். டெல்லிக்கு செல்லும்போது ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக செல்கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றபோது ஓ.பன்னீர்செல்வம் மகன் மட்டும் எப்படி வெற்றி பெற்றார்? ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உள்ள 3 சீட்டுகளில் ஒரு பதவி அன்புமணி ராமதாசுக்கு வழங்கி விட்டால் மீதம் உள்ள 2 பதவிகளை பா.ஜனதா கேட்கலாம். அ.தி.மு.க.வை வழிநடத்த டி.டி.வி. தினகரனால் மட்டுமே முடியும்.

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். தோல்வியை கண்டு துவளாமல் சுறு சுறுப்புடன் கட்சி பணி ஆற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News