செய்திகள்

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம்- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

Published On 2019-06-09 11:18 GMT   |   Update On 2019-06-09 11:35 GMT
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அவர்களது தலைமையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றுள்ளனர். இவைகள் அனைத்துமே மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். நீட்தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் தள்ளுபடி, மாதந்தோறும் ரூ.6000 போன்ற வாக்குறுதிகளை யாராலும் நிறைவேற்ற முடியாது.

நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்ததால் இதனை சொல்லவில்லை. ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கூறி பொய்யான வெற்றியை பெற்றுள்ளனர்.

எங்களுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு படிப்பினையாகும். இதன்மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் புதிய உத்வேகத்துடன் பணியாற்றி மக்கள் மனதில் இடம்பெறுவோம்.

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை வேண்டும் என ராஜன்செல்லப்பா கூறிவருகிறார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அவரது தலைமையின் கீழ் அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.


இடையில் சிறுசிறு பிரச்சினைகள் எழும்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சச்சரவைப்போல பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவரது கருத்தை வெளியில் சொல்லாமல் அதற்குரிய இடமான செயற்குழுவில்தான் கூறியிருக்கவேண்டும்.

அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News