செய்திகள்

மக்களின் எழுச்சியால் திமுக வெற்றி பெறுவது உறுதி- முக ஸ்டாலின்

Published On 2019-05-04 08:12 IST   |   Update On 2019-05-04 08:12:00 IST
திருப்பரங்குன்றத்தில் வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், “மக்களின் எழுச்சியால் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி” என்று கூறினார். #TNBypoll #DMK #MKstalin
திருப்பரங்குன்றம் :

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவரது பேச்சை கேட்க பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

என்னை வழி நெடுகிலுமாக சிறப்பான முறையில் வரவேற்ற உங்களுக்கு மனதார நன்றி கூறுகிறேன். தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி அல்ல தி.மு.க. எப்போதும் மக்களுக்காக பணியாற்றக்கூடியவர்கள் நாங்கள்.

வருகிற 23-ந் தேதி, திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பது போல் மக்களிடமும் அந்த நம்பிக்கை இருப்பது நன்றாகவே தெரிகிறது.

மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதேபோல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலியாக வேண்டும். ஓட்டப்பிடாரம் தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு பெண் என் கையை குலுக்கி பாரம்பரியமாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தேன். இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களிக்கப்போகிறேன் என்றார். அதேபோல இன்னொரு சகோதரி கடந்த 4 முறை இரட்டை இலைக்குத் தான் வாக்களித்தேன். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களிக்கப்போகிறேன் என்றார்.

அதே போல் திருப்பரங்குன்றத்தில், இரட்டை இலைக்கு வாக்களித்த ஒரு பெண் உதயசூரியனுக்கு வாக்களிக்கப்போவதாக என்னிடம் கூறினார். (அப்போது அதோ நிற்கிறாரே என்று கூறி கூட்டத்தில் அந்த பெண்ணை காட்டினார். உடனே அந்த பெண் தனது கையை உயர்த்தி காட்டினார்). மக்களின் இந்த எழுச்சியால் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறப்போவது உறுதி.

திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் வைக்கப்பட்ட ரேகை ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்று கோர்ட்டை நாடி வெற்றி பெற்றார். உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் பொய், புரட்டுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான நிலை உள்ளது. ஜெயலலிதாவும் ஒரு பெண்தான். அவருக்கே பாதுகாப்பு இல்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. இதை நான் கூறவில்லை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பதவி இல்லை என்ற நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தியபோது சொன்னார். ஜெயலலிதாவின் கோடநாடு வீட்டில் 4 பேர் கொலையுண்ட விஷயத்திலும் நடவடிக்கை இல்லை. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை.

கலைஞருக்கு அண்ணாவின் சமாதிக்கு அருகில் 6 அடி இடம் கேட்டோம். தர மறுத்து விட்டனர். மக்களுக்காக சேவையாற்றிய கலைஞருக்கு 6 அடி இடம் கூட தராத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். விலைவாசி உயர்வு, குடிநீர் தட்டுப்பாடு, அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலை மாற தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரை மாநகர் பொறுப்புக் குழு தலைவர் கோ.தளபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று காலையில் திருப்பரங்குன்றம் வந்த ஸ்டாலின், திருப்பரங்குன்றம் நுழைவு வாசலில் இருந்து பஸ் நிலையம் வரை சுமார் 45 நிமிடங்கள் நடந்தே சென்று, மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கடை வீதியில் ஒவ்வொரு கடையாக வியாபாரிகளை பார்த்து வாக்கு சேகரித்தார்.

அப்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் ஆர்வமாக வந்து அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெண்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம், சன்னதி தெரு, பெரிய ரத வீதிகளுக்கும் சென்று, அங்கு திரண்டு இருந்த மக்களை சந்தித்தும் ஆதரவு கோரினார். #TNBypoll #DMK #MKstalin 

Similar News