செய்திகள்

மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது - ஜெயக்குமார் பேட்டி

Published On 2019-05-03 17:55 IST   |   Update On 2019-05-03 17:55:00 IST
மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #ministerJayakumar #mkstalin #dinakaran
சென்னை:

அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், 3 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

3 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நடக்கும்போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. மே 23-ம் தேதிக்கு பின் அமமுக, திமுக நினைத்தது எதுவுமே நடக்காது. 


அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும், துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும். பாண்டவர்களான எங்களுக்கு சூழ்ச்சி செய்யத் தெரியாது. கட்சி , ஆட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது. மே 23 ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது.

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழுமையான அளவில் உள்ளது. சமூகத்திற்கு நண்பனாக இருப்பதே பத்திரிக்கையின் சிறந்த கடமையாக இருக்க முடியும். உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ministerJayakumar #mkstalin #dinakaran

Similar News