செய்திகள்

தகுதி நீக்க நோட்டீசு - 3 எம்.எல்.ஏ.க்கள் 7-ந்தேதி சபாநாயகருடன் சந்திப்பு

Published On 2019-05-03 15:59 IST   |   Update On 2019-05-03 15:59:00 IST
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் 7-ந்தேதி சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளனர். #ADMK #3ADMKMLAs

சென்னை:

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதையடுத்து இவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் பதவி பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

அதன்பேரில் கடந்த வாரம் சபாநாயகர் தனபாலை அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்தார். அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதற்கான ஆதாரங்களையும் அவர் அளித்தார்.

இதை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படி அவர் 3 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி 3 அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த நோட்டீஸ் ஒவ்வொன்றும் தலா 180 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. அதில் கட்சி நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டு இருப்பதால் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? உங்கள் பதவியை ஏன் பறிக்க கூடாது? என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஒரு வாரத்துக்குள் இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நோட்டீஸ்களை 3 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்து போட்டு பெற்று கொண்டனர்.

அந்த நோட்டீஸ்களை படித்து பார்த்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள், “நாங்கள் இப்போதும் அ.தி.மு.க.வில்தான் இருக்கிறோம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக நீடிக்கிறோம். அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட மாட்டோம்” என்று கூறி வருகிறார்கள்.

என்றாலும் அவர்கள் மூவரும் டி.டி.வி.தின கரனுக்கு ஆதரவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புகைப்பட ஆதாரங்களும் இருக்கின்றன. எனவே அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த தகுதி நீக்க நடவடிக்கையை தவிர்க்க ரத்தினசபாபதி, பிரபு, கலைச் செல்வன் 3 எம்.எல்.ஏ.க்களும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூவரும் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் மூவரும் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நீடிப்பதாகவும் கட்சி விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்றும் விளக்கம் அளிப்பார்கள். சபாநாயகர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூவரும் டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது. தினகரன் அவர்களுக்கு எத்தகைய திட்டத்தை கூறியுள்ளார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு. க.வுடன் சமரசமாக செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் மூவரும் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தொடர்பு கொண்டு சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

3 எம்.எல்.ஏ.க்களில் பிரபு, கலைச்செல்வன் இருவரும் தங்கள் தொகுதியில் அ.தி.மு.க. தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே டி.டி.வி.தினகரன் பக்கம் சாய்ந்தனர். அந்த உள்ளூர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சி.வி.சண்முகம் பேச்சு நடத்திஇருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே பிரபு, கலைச்செல்வன் இருவரும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட தயார் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் பிரபு, கலைச் செல்வனை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. டி.டி.வி.தினகரனின் சிலிப்பர்செல்களாக அவர்கள் அ.தி.மு.க.வுக்குள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்களது பதவியை பறிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருசாரார் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் தங்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச் சாட்டை மறுக்கும் பிரபுவும், கலைச்செல்வனும் நாங்கள் தினகரன் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அ.தி.மு.க. கொறடா உத்தரவுபடி செயல்படுவோம். சட்ட சபையில் அ.தி.மு.க. அரசு கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஆதரித்து வாக்களிப்போம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ரத்தினசபாபதி மட்டும் தொடர்ந்து டி.டி.வி. தினகரனின் ஆலோசனையை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரபு, கலைச்செல்வன் இருவரும் தற்போது அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைபாடுகளில் இருந்து மாறி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் விவகா ரத்தில் யார்-யார் பதவி பறிக்கப்படும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், “3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் தமிழ்நாடு சட்டசபை சட்ட விதி 7(3)ன்கீழ் நடவடிக்கை எடுக்க கொறடா மனு கொடுத்துள்ளார். இந்த மனு நகல் சட்டசபை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வி‌ஷயத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

அவர் முடிவு எடுப்பதற்கு எந்த கால கெடுவும் கிடையாது. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு விவகாரத்தில் அவர் முடிவு எடுக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்” என்றார்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர். எனவே இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தே 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா? என்பது தெரியவரும். #ADMK #3ADMKMLAs

Similar News