செய்திகள்

சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி - மு.க.ஸ்டாலின்

Published On 2019-05-03 13:06 IST   |   Update On 2019-05-03 13:06:00 IST
சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேதாஜி நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்தப்பகுதி மக்கள் பாராளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்கு அளித்து உள்ளீர்கள். இப்போது சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிறது.

ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது. ஏ.கே.போஸ் போட்டியிட்ட போது ஜெயலலிதா சுய நினைவில்லாமல் இருந்தபோது கைரேகை வாங்கியது செல்லாது என்று சரவணன் வழக்கு போட்டு வெற்றி பெற்றதால் இந்த தேர்தல் வந்துள்ளது.

ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர். இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்காகத்தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளேன்.

 


மத்தியில் மோடி தோற்பது உறுதி. மோடி தான் எடப்பாடி ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்படி என்றால் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும் உறுதி.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று கூறி ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்தார். அதன் பின்னர் துணை முதல்- அமைச்சராகி விட்டார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளதால் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் தற்போது எங்களுக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்.

கொடநாட்டில் ஜெயலலிதா வைத்திருந்த ஆவணங்கள் திருட்டு போய் உள்ளது. 4 கொலைகளும் நடந்துள்ளன. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கருணாநிதி மறைந்த பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய 6 அடி இடம் கேட்டோம். அதைக்கூட தர இந்த அரசுக்கு விருப்பம் இல்லை. கோர்ட்டுக்குச் சென்று தான் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உத்தரவு பெற்றோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். கேபிள் கட்டணம் குறைக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin

Similar News