செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- கலெக்டர் நாகராஜன் பேட்டி

Published On 2019-05-03 07:35 GMT   |   Update On 2019-05-03 07:35 GMT
திருப்பரங்குன்றம் தொகுதியில் 88 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என இனம் கண்டறியப்பட்டு உள்ளதாக கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார். #TNBypoll
மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான நாகராஜன் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை ஆயத்த பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அங்குள்ள பாதுகாப்பு குளறுபடிகள் நீக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பொதுத் தேர்தல் பார்வையாளராக ஓம்பிரகாஷ் சாய், தேர்தல் செலவின பார்வையாளராக சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என இனம் கண்டறியப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் பணிக்காக 1,500 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி தரப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் 1,500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. திருப்பரங்குன்றத்தில் பறக்கும்படை சோதனை மூலம் இதுவரை ரூ. 9 லட்சத்து 74 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும். தேர்தலையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், இடைத்தேர்தலையொட்டி திருப்பரங்குன்றத்தில் கூடுதலாக 12 சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளில் டெல்டா குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார். #TNBypoll
Tags:    

Similar News