செய்திகள்

அரக்கோணம் - திருப்பத்தூரில் வருமானவரி சோதனையில் ரூ.1¼ கோடி சிக்கியது

Published On 2019-04-14 08:57 GMT   |   Update On 2019-04-14 11:01 GMT
அரக்கோணம், திருப்பத்தூரில் அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #ITRaids

வேலூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரது வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது.

அப்போது தி.மு.க. பிரமுகரின் சிமெண்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் நாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடி பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.

அரக்கோணம், திருப்பத்தூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் அ.தி.மு.க. பிரமுகரான இவர், பைனான்ஸ், சீட்டு, நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் வருமான வரி துறை இணை கமி‌ஷனர் அபிநயா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியளவில் முடிந்தது. இதில் ரூ.26 லட்சம் பணம் சிக்கியது.

 


இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் வைத்திருந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

அரக்கோணத்தை அடுத்த மின்னல் அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன். தொழிலதிபரான இவர் லுங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து லுங்கிகளை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது உறவினர் மாதவன் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் தீனதயாளன் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அவரது அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றிலும் சோதனையில் ஈடுபட்டனர். மாதவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இரவு முழுவதும் நடந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் முடிந்தது. தீனதயாளன் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சமும், மாதவன் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் பஸ்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஸ்கூல் பேக் கேட்பாரற்று கிடந்தது. அதில் கட்டுக்கட்டாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. அனைத்தும் ரூ.500, 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

அந்த பணத்தை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இந்த பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக யாரேனும் எடுத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விளாத்திகுளம் அருகே பஸ்சில் பயணம் செய்த ராமராஜ் என்பவரின் துணிப் பையில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது.

ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார்.

இதற்கிடையே அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

இதில் நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவரான காங்கிரஸ் பிரமுகர் வினோபா, தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வரையில் ரூ.182 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 991 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.284.67 கோடி ஆகும்.  #LokSabhaElections2019 #ITRaids

Tags:    

Similar News